சூப்பர் ஸ்டாருக்குள் இருந்த சூப்பர் திறமை... ரகசியத்தை போட்டுடைத்த ப்ரித்விராஜ் மனைவி...!

ரத்தம் உறிஞ்சும் அரசியலின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டிய படம் ‘லூசிபர்’. தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்திருந்தார். ஒரு அரசியல் கட்சியின் தலைவர் இறந்துவிட்டார், அந்த கட்சியைக் கைப்பற்ற யாரெல்லாம் காய் நகர்த்துவார்கள் என்பதை பரபரப்பாக விளக்கி இருந்த இந்த படத்தில் ஜோசப் என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்தார் மோகன்லால். பல்வேறு அதிரடி திருப்பங்களைக் கொண்ட இந்த படத்தை மலையாளத்தின் பிரபல நடிகரான ப்ரித்விராஜ் இயக்கி இருந்தார். மலையாளத்திலும், தமிழிலும் மிகுந்த வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம், மோகன் லால் திரைப்பயணத்தில் அசைக்க முடியாத மைல் கல்லாக மாறியுள்ளது.

நல்ல ஓவியர், மார்ஷியல் ஆர்ட்ஸ் கலை வித்தகர், குத்துச் சண்டையில் பயிற்சி பெற்றவர் என பன்முகத் தன்மை கொண்ட மோகன்லாலுக்குள் மற்றொரு சுவாரஸ்யமான திறமையும் மறைந்துள்ளதை ப்ரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார். ப்ரித்விராஜ்க்கும் அவரது மனைவி சுப்ரியா மேனனுக்கும் தனது வீட்டில் விருந்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார் மோகன் லால். தவிர்க்க முடியாத காரணங்களால் ப்ரித்விராஜ் வர முடியாமல் போக, சுப்ரியா மட்டும் தனியாக விருந்திற்கு சென்றுள்ளார். அங்கு சுப்ரியாவை சமையற் கலைஞர் உடையில் வரவேற்ற மோகன் லால், போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு அசைவ உணவுகளை சமைத்து விருந்து வைத்துள்ளார். 

மோகன் லால் கொடுத்த விருந்தால் அசத்து போன சுப்ரியா இன்ஸ்டாகிராமில் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அத்துடன் மோகன்லால் அவரே சமைச்சி, தனக்கு செமையான விருந்து வச்சதையும் குறிப்பிட்டுள்ளார். இதன்  மூலம் மலையாள சூப்பர் ஸ்டாருக்குள் மறைந்திருந்த மற்றொரு திறமையும் உலகிற்கு தெரியவந்துள்ளது. மேலும் சுப்ரியா போட்ட இன்ஸ்டாகிராம் போட்டோஸ், சேட்டன்களால் செம வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.