Asianet News TamilAsianet News Tamil

நான்கு மொழிகளில் வெளியாகும் 'ஆடுஜீவிதம்' படத்தின் டப்பிங் முடித்த நடிகர் பிருத்விராஜ்!

நடிகர் பிருத்விராஜ்  ஆடுஜீவிதம் படத்தின் டப்பிங் நான்கு மொழிகளிலும் முடித்துவிட்டு மிகவும் உற்சாகமாக பகிர்ந்து கொண்ட தகவல் இதோ...
 

prithiviraj completed the goat life aadujeevitham movie dubbing mma
Author
First Published Mar 15, 2024, 11:03 PM IST

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகியுள்ள திரைப்படம் அடுஜீவிதம். பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் 28 மார்ச், 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் தற்போது முடித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பகிர்ந்துள்ளதாவது, “தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி டப்பிங் முடிந்தது! இந்த முழு கதாபாத்திரத்தையும் மீண்டும் ஒரு முறை வாழ்ந்திருக்கிறேன். பின்னர் அதை 4 வெவ்வேறு மொழிகளில் மீண்டும் 4 முறை பார்த்திருக்கிறேன். எபிக் திரைப்படம் இது! நஜீப்பின் நம்பமுடியாத உண்மை கதையைக் காணத் தயாராகுங்கள்” எனக் கூறியுள்ளார். 

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் வெளிநாட்டு மொழிகள் உட்பட 12 வெவ்வேறு மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தொண்ணூறுகளின் முற்பகுதியில் கேரளாவின் பசுமையான கடற்கரையிலிருந்து வெளிநாட்டில் அதிர்ஷ்டத்தைத் தேடி இடம்பெயர்ந்த  இளைஞன் நஜீப்பின் வாழ்க்கையின் உண்மைக் கதையைதான் இந்த நாவல் விளக்குகிறது. 

தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெஸி இயக்கத்தில் விஷுவல் ரொமான்ஸ் தயாரித்துள்ள ’தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தில், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், இந்திய நடிகர்களான அமலா பால் மற்றும் கே.ஆர். கோகுல், பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரவிருக்கும் படத்தின் இசை இயக்கம் மற்றும் ஒலி வடிவமைப்பை அகாடமி விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் செய்துள்ளனர். படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை சுனில் கே.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ. ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும். இதன் தயாரிப்பு தரம், கதைசொல்லல் மற்றும் நடிப்புத் திறன் ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைத்துள்ளது. சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும். 

இந்திய சினிமாவின் மிகப் பெரிய பாலைவனப் படமான ’தி கோட் லைஃப்’ திரையரங்குகளில் 28 மார்ச், 2024 அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios