கோவாவில் இன்று தொடங்கிய சர்வதேச திரைப்பட விழாவில் பெருமைக்குரிய இந்திய பிரஜை விருதுபெற்ற ரஜினி அவ்விருதை, தனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்,உடன் வேலை செய்த டெக்னீஷியன்கள் தன்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்து அவரது ரசிகர்களைப் பரவசமூட்டினார். அதையொட்டி அவர் விருது பெறும் நிகழ்வு ட்விட்டரில்  #PrideIconOfIndiaRAJINIKANTH என்ற பெயரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

50-வது கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி வரும் 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடக்கும் தொடக்க விழாவில் பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் ரஜினியுடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் கலந்துகொண்டார்.

இப்பிரிவில் பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய 2 தமிழ்த் திரைப்படங்களும் தேர்வாகியுள்ளன. விழாவின் முக்கிய ஹைலைட்டாக இசையமைப்பாளர் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி ஒன்றும் இடம் பெறுகிறது. தனது முக்கிய கலைஞர்களைக் கொண்டு ராஜா நடத்தவிருக்கும் அந்நிகழ்ச்சி சென்னையிலிருந்து லைவ்வாக அங்கு ஒளிபரப்பப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக ரஜினிக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்பட்டது. அதே போல் ஏற்கனவே தாதா சாகேப் பால்கே விருது பெற்ற அமிதாப்பை கவுரவிக்கும் வகையில் அவர் நடித்த 6 படங்கள் திரையிடப்படுகின்றன. 9 நாட்கள் நடக்கும் இந்த திரைப்பட விழாவில் சர்வதேச, இந்தியன் பனோரமா உட்பட பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் 3 இடங்களில் திரையிடப்படுகின்றன. ஈரான், கொரியா, பிரான்ஸ் உட்பட 76 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பல்வேறு மொழி திரைப்படங்களும், இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை சேர்ந்த 41 திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. 

விழா தொடங்கிய சிறுது நேரத்திலேயே ரஜினியும் அமிதாப்பும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக்கொண்ட படங்களில் வலைதளங்களில் வைரல் ஆகத் தொடங்கியுள்ளன.துவக்க காலங்களில் ‘அந்தாகானூன்’[1983],’கிராஃதார்’[1985],’ஹம்’[1991]ஆகிய படங்களில் ரஜினியும் அமிதாப்பும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.