ஊரடங்கு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ரஜினி வீட்டிலேயே முடங்கி இருந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு தினமும் சென்று வருவதை ரஜினி வழக்கமாக வைத்துள்ளார். இந்த சமயத்தில் ரஜினியே காரை ஓட்டிச் சென்றுவிட்டு வீடு திரும்பி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் ரஜினி கார் ஓட்டிச் சென்ற போது எடுத்த புகைப்படம் செம வைரல் ஆனது. மேலும் அந்த கார் உலகிலேயே விலை அதிகமானதாக கூறப்படும் லம்போர்கினி வகையை சேர்ந்தது.

ரஜினி ஓட்டிய அந்த கார் லம்போர்கினி யூரஸ் வகை காராகும். இந்த கார் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும். வெறும் மூன்றரை நொடியில் 100 கிலோ மீட்டர் வேகத்தை லம்போரகினி யூரஸ் கார் எட்டக்கூடியது. காரின் உட்பகுதி முழுவதும் இத்தாலிய கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்டதாகும். இந்தியாவில் இந்த காரின் விலை நான்கு லட்சம் டாலர்கள் வரை இருக்கும் என்கிறார்கள். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3 கோடி ரூபாய் ஆகும்.

ரிஜிஸ்ட்ரேசன், ரோடு டேக்ஸ், இன்சூரன்ஸ் என மொத்த விலை 4 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இவ்வளவு அதிக விலை கொண்ட காரை ரஜினி ஓட்டிச் சென்றதால் இந்த கார் அவருக்கு சொந்தமானது என்று பேச்சுகள் அடிபட்டன. ரஜினி ஏன் இவ்வளவு விலை அதிகம் கொண்ட காரை வாங்க வேண்டும் என்றும் கேள்விகள் எழுந்தன. அதே சமயம் ரஜினி உழைக்கிறார் அவருக்கு பிடித்த காரை வாங்குகிறார் என்று ரஜினி ரசிகர்கள் சப்போர்ட்டுக்கு வந்தனர். இந்த நிலையில் ரஜினி ஓட்டிய கார் உண்மையில் அவருடையது தானா? என்று விசாரித்தோம்.

அதற்கு ரஜினி ஓட்டிய லம்போர்கினி கார் அவருடையது இல்லையாம். அந்த கார் ரஜினியின் இளைய மருமகன் அதாவது இளைய மகள் சவுந்தர்யாவின் கணவர் விஷாகனுக்கு சொந்தமானது. அண்மையில் தான் இந்த காரை விஷாகன் வாங்கியுள்ளார். மேலும் இந்த காரில் தான் ரஜினி கடந்த சில நாட்களாக போயஸ் தோட்டத்தில் இருந்து கேளம்பாக்கத்திற்கு சென்று வந்துள்ளார். அப்படி செல்லும் போது ரஜினி ஒரு முறை காரை ஓட்ட அதனை அவரது மகள் சவுந்தர்யா புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தான் வைரலாகியுள்ளது. மேலும் கேளம்பாக்கத்தில் லம்போர்கினி காருடன் ரஜினி, அவரது மகள் சவுந்தர்யா, மருமகன் விசாகன், பேரன் வேத் ஆகியோர் இருக்கும் புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.