தேர்தல் வியூகம் வகுப்பதில் வல்லவரான பிரசாந்த் கிஷோர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பார்ட் டைம் ஆலோசகராகப் பணியாற்ற ஒப்புக்கொண்டிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அவருக்கு ரூ 2கோடி வரை கொடுக்க கமல் சம்மதித்திருக்கிறாராம்.

சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக பிரசாந்த கிஷோர் கமலுக்கு ஆஸ்தான ஆலோசகராகப் பொறுப்பேற்கவிருக்கிறார் என்ற செய்திகள் நடமாடிவந்த நிலையில் அவர்கள் இருவருக்குமான சந்திப்பு ஒரே ஒரு முறை மட்டுமே நடந்தது. அந்த சந்திப்பில் தீர்க்கமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கு பிரசாந்த் கிஷோர் எவ்வித பங்களிப்பையும் அளிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது கமல் ‘பிக்பாஸ் 3’, ‘இந்தியன் 2’,’தேவர் மகன் 2’ என்று பிசியாக இருக்கும் நிலையில் தன்னால் குறைந்த பட்சம் அடுத்த சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வரை தன்னால் அரசியல் பணிகள் ஆற்றமுடியாது என்று நினைக்கிறார். இதற்காக கடந்த வாரம் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கமல் தனது நிலையை நிர்வாகிகளுக்கு விளக்கினார். இக்கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் சிலர், கமல் இவ்வளவு பெரிய இடைவெளி எடுத்துக்கொண்டால் கட்சியின் நிலை என்னவாவது? என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல் தனது வெற்றிடத்தை நிரப்ப சில உத்திகள் உள்ளன. தான் சினிமாவில் பிசியாக இருந்தாலும் கட்சியின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்படாது என்று உத்தரவாதம் அளித்திருக்கிறார்.

கமலின் அந்த ஸ்ட்ராங்கான உத்தரவாதத்துக்குப் பின்னால் இருப்பவர் பிரஷாந்த் கிஷோர்தான் எனவும், ஏற்கனவே எடப்பாடிக்குக் கொடுத்த வாக்குறுதியால் தன்னால் 2021 தேர்தலுக்குப் பணியாற்ற முடியாது. ஆனால் அதே சமயம் தேர்தலுக்கு முந்தைய வியூகங்களை, குறிப்பாக கமல் ஆக்டிவாக இருக்கமுடியாத அடுத்த ஒரு வருட காலத்துக்கான சில வியூகங்களை தன்னால் வகுத்துத்தர முடியும் என்றும் பிரஷாந்த் உத்தரவாதம் அளித்திருப்பதாகவும் தெரிகிறது. இந்த பார்ட் டைம் ஆலோசனைக்காக அவருக்கு 2கோடி ரூபாய் சன்மானம் பேசப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.