Prakashraj is not in NTR role - says Ramgopal Verma ...
பாலகிருஷ்ணா நடிக்க இருக்கும் ‘லக்ஷ்மியின் என்.டி.ஆர்’ என்ற படத்தில் என்.டி.ஆர். கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிப்பதாக கிளம்பிய செய்தியை இயக்குநர் ராம்கோபால் வர்மா மறுத்துள்ளார்.
இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துத் தயாரிக்க இருக்கும் படம் ‘லக்ஷ்மியின் என் டி ஆர்’.
இந்தப் படத்தில் என்.டி.ஆர் வேடத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிக்கவிருக்கிறார் என டோலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், தற்போது அந்தச் செய்திகள் எதுவும் உண்மையில்லை என ராம்கோபால் வர்மா அறிவித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் மையக் கதை, “ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்களால் என் டி ஆர் என அன்புடன் அழைக்கப் படும் பழம்பெரும் நடிகரும், முன்னாள் ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வருமான நந்தமூரி தாரக ராமாராவின் வாழ்வில் அவரது இரண்டாவது மனைவியான லக்ஷ்மி பார்வதியின் வருகையைத் தொடர்ந்து அவரது அரசியல் வாழ்வில் நிகழ்ந்த மாபெரும் மாற்றங்கள்” இதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.
என் டி ஆர், லக்ஷ்மி பார்வதியைத் திருமணம் செய்து கொண்டதில் அவரது குடும்பத்தினருக்கு அதிருப்தியே நிலவியது. எனவே அதையொட்டிய வாழ்க்கை நிகழ்வுகளை அடிப்படியாகக் கொண்டு வெளிவர இருக்கும் இந்தத் திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளுக்கு ஆந்திரத்தில் பஞ்சமில்லை.
இந்த நிலையில், படத்தின் கதாபாத்திரங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும், இதுவரை வெளிவந்த தகவல்கள் தவறானவை என்றும் ராம்கோபால் வர்மா அறிவித்துள்ளார்.
