சிவாஜியின் சிலை அருகே மின் விளக்கு அமைந்த மாநகராட்சி..நேரில் சென்று பாராட்டிய பிரபு
எனது தந்தை சிவாஜியின் சிலை அமைந்துள்ள தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள பகுதியில் மாநகராட்சி சார்பில் மின் விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளதற்கு நன்றி என கூறியுள்ளார் பிரபு.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரபு. 90 களில் இவர் நடிப்பில் பல பிளாக் பாஸ்டர் படங்கள் வெளிவந்தன. பிரபு - குஷ்பூ கம்போ மிக பிரபலம். வாரிசு நடிகரான இவர் தனது தந்தை சிவாஜி போல வரலாற்று நாயகனாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கதாநாயகனோடு கமல், ரஜினி உள்ளிட்டோருடன் துணை வேடங்களிலும் தோன்றிய இவர் ஒரு கட்டத்திற்கு மேல் நாயகனாக நடிக்கும் வாய்ப்பை இழந்தார். இருந்தும் தந்தை போன்ற கதாபாத்திரங்களில் கச்சிதமாக பொருந்தும் பிரபு இன்றைய தலைமுறை நடிகர் பலரோடும் நடித்து விட்டார். இவரது மகன் விக்ரம் பிரபு தற்போது முன்னணி நாயகனுக்கான ரேசில் இடம் பிடித்துள்ளார். பிரபு தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு.மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தஞ்சையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபு தஞ்சை மாநகராட்சி குறித்து பாராட்டி தள்ளியுள்ளார். திருமணத்திற்கு தனது மனைவி புனிதாவுடன் கலந்து கொண்ட பிரபு நிகழ்ச்சி முடிந்த கையோடு தஞ்சை மாநகராட்சி அலுவலகத்துக்கு காரில் சென்றுள்ளார்.
பிரபுவின் வருகைக்காக முன்கூட்டியே தயார் நிலையில் இருந்த மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், ஆணையர் சரவணகுமார், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் பிரபுவுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றுள்ளனர். பின்னர் நடிகர் பிரபுவம் அவர்களுக்கு மரியாதை செய்துள்ளார்.
பின்னர் நடிகர் பிரபு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளோருடன் புகைப்படம் எடுத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது, தஞ்சை மாநகராட்சி முன்பு இருந்ததைப்போல இல்லை. பல்வேறு பணிகள் சிறப்பாக நடைபெற்று மிகப்பெரிய வளர்ச்சியை தற்போது கண்டுள்ளது. தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக மாறியுள்ளது.. இதற்காக மேயர், ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் எனது தந்தை சிவாஜியின் சிலை அமைந்துள்ள தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள பகுதியில் மாநகராட்சி சார்பில் மின் விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளதற்கும், சிறப்பாக பராமரித்து வருவதற்கும் மாநகராட்சிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.