தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் பவர்ஸ்டார் சீனிவாசன். இவர்  திடீரென காணவில்லை என அவரது மனைவி ஜூலி சென்னை அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த தகவல் அனைத்து ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் மூலம் வைரலாக பரவியது. 

இந்நிலையில் தற்போது அந்த புகாரை ஜூலி வாபஸ் பெற்றுள்ளார்.

சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத காமெடி நடிகர்களில் பவர்ஸ்டார் சீனிவாசனும் ஒருவர்.  ஏற்கனவே இவர் மீது பல்வேறு பொருளாதார குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் தமிழக, மற்றும் டெல்லி போலீசார்களால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசனை திடீரென காணவில்லை என்று அவரது மனைவி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை தேடி வந்த நிலையில் திடீரென ஜுலி தனது புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

மேலும் தனது கணவர் தன்னிடம் சொல்லாமல் வெளியே சென்றுவிட்டதாகவும், போன் செய்தபோதும் அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என்பதால் ஒருவேளை போலீசார்களால் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் புகார் மனு அளித்ததாகவும் ஆனால் சற்றுமுன்னர் அவர் ஊட்டியில் இருப்பதாக தெரிய வந்துள்ளதால் புகாரை வாபஸ் பெற்றதாக கூறியுள்ளார்.