தனது மோசடி வேலைகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தப்பிக்க, பவர் ஸ்டார் சீனிவாசன் தன்னைத்தானே கடத்திக்கொண்டு நாடகம் ஆடியிருக்கக்கூடும் என்று பரபரப்பான செய்திகள் வருகின்றன. ’உயர்திரு 420’ என்று சினிமாக்காரர்களால் செல்லமாக அழைக்கப்படும் சீனிவாசன் வெரைட்டியான  சீட்டிங் வேலைகளில்  கரைகண்டவர்.

நேற்றுமுதல் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என அவரது மனைவி புகார் அளித்திருக்கும் நிலையில், கடன் பிரச்சினையிலிருந்து தப்பிப்பதற்காக பொய் புகார் ஏதேனும் அளிக்கப்பட்டுள்ளதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.

  பவர் ஸ்டாரின் மனைவி ஜூலி, அண்ணாநகர் காவல்நிலையத்தில், புகார் அளித்தார். அதில், வெளியில் சென்ற தனது கணவர் வீடு திரும்பவில்லை என்றும், கடன் பிரச்சினையால் சீனிவாசனை யாரேனும் கடத்தி சென்றிருப்பார்களோ என ஐயம் எழுவதாகவும், கூறியிருந்தார். 

இதுதொடர்பாக அண்ணாநகர் போலீசார் நடத்திய விசாரணையில், நீலகிரி மாவட்டம் உதகையில், பவர் ஸ்டார் சீனிவாசன் பத்திரமாக இருப்பது தெரியவந்துள்ளது.இதைத்தொடர்ந்து சீனிவாசனை பார்ப்பதற்காக ஜூலி தற்போது உதகைக்கு சென்றிருப்பதாக அவருடைய உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  

ஆனால் பெரும் தில்லாலங்கடி மன்னனான பவர் ஸ்டார் இதற்கு முன்பும் இதுபோன்ற பல ஜெகஜ்ஜால கில்லாடி வேலைகளில் ஈடுபட்டு எஸ்கேப் ஆகிவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.