மக்களுக்காக உயிரை பணயம் வைத்து, சிகிச்சை அளித்து...  கொரோனாவால் மரணமடைந்த மருத்துவர் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்திய சம்பவம், தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஏற்கனவே, தன்னுடைய அலுவலகம், மற்றும் கல்லூரியை கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்க கொடுத்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த், நேற்று வெளியிட்ட அறிக்கையில்...  தன்னுடைய ஆண்டாள் அழகர் கல்லூரியில் ஒரு பகுதியை, கொரோனாவினால் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய தருவதாக கூறி, அனைவரையும் நெகிழ வைத்தார்.

கேப்டன்,  விஜயகாந்த்தின் இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வந்தது.

இந்த நிலையில் பிரபல அரசியல் கட்சி தலைவரும், தெலுங்கு முன்னணி நடிகருமான பவன்கல்யாண் தனது சமூக வலைத்தளத்தில் விஜயகாந்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,  தேமுதிக தலைவர்  விஜயகாந்தின் இந்த அறிவிப்பு வியப்படைய செய்தது. சூப்பர் ஸ்டாரான அவரது மனிதாபிமானத்தையும் வெளிப்படுத்துகிறது. தன்னுடைய கல்லூரி நிலத்தை கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அவர் கொடுக்க முன்வந்திருப்பது மிகப்பெரிய செயல் என்று தெரிவித்துள்ளார்.