விமான நிலையத்தில் அமர்ந்திருந்தபோது, நண்பர் ஒருவரே தமது மார்பை பிடித்து அழுத்தி, அதிர்ச்சி தந்ததாக பிரபல நடிகை ஒருவர் கூறியிருக்கும் தகவல், ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான சீண்டல் அனுபவங்களை டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருவதுடன், தொலைகாட்சி பேட்டிகள், யூடியூப் பக்கங்களில் பகிரங்கப்படுத்தி வருகின்றனர். 

இதற்கு #metoo என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் தற்போது சேர்ந்திருப்பவர் பிரபல இந்தி நடிகையும், திரைப்பட இயக்குநருமான பூஜா பட். நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹார்ன் ஓகே ப்ளீஸ் திரைப்படத்தில் நடித்தபோது, தமக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக, கூறிய தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவு குரல் கொடுத்த பூஜா பட், தற்போது தமக்கு நேர்ந்த ஒரு மோசமான பாலியல் சீண்டல் அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.

அதில், “நாம் எதிரிகளிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிரிகள் வேறு எங்கும் இல்லாமல், உங்கள் எதிரிலேயே அமர்ந்து இருந்தால், என்ன செய்வது? பெண்கள் எப்போதும் எதிரிகளிடம் எச்சரிக்கை உணர்வுடன், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.”சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு ஆண் நண்பருடன் பழகி வந்தேன். அவர் எனக்கு நல்ல துணையாக இருந்தார். பல இடங்களுக்கு சென்று வந்தோம். அவரால் நான் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தேன். 

ஆனால், அந்த ஆண் நண்பர் எப்போதும் மதுபோதையில் இருப்பவர். அது மட்டுமே எனக்கு பிரச்சனையாக இருந்தது. ஒருமுறை நானும், அவரும் விமான நிலையம் ஒன்றில் அமர்ந்திருந்தோம். அருகருகே அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போது, நண்பர் திடீரென எனது மார்பகத்தைப் பிடித்து அழுத்தினார். அந்த கணத்தில் மிகவும் அதிர்ந்துபோன என்னால், என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த ஆண் நண்பருடன் பழகுவதில்லை” என்று கூறுகிறார் பூஜா பட். 

மேலும், தனுஸ்ரீ தத்தா விவகாரம் குறித்து பேசியுள்ள பூஜா பட், அவரை பேச விட வேண்டும். பெண்களுக்கு எதிராக இந்த சமூகத்தில் ஏற்படும் பிரச்சனையையே தனுஸ்ரீ பேசுகிறார். அவருக்கு எதிராக பெண்களே குரல் கொடுப்பது ஏற்புடையதல்ல. அதே நேரத்தில் சொன்ன குற்றச்சாட்டுகளை பொதுவெளியிலேயே பேசுவதை விடுத்து, நீதிமன்றத்தை நாட வேண்டியது தனுஸ்ரீயின் வேலை என்றும் பூஜா பட் அறிவுரை கூறியுள்ளார்.