த்ரிஷா முன் மண்டியிட்ட கார்த்தி! புதிய போஸ்டருடன் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' ஃபர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு!
'பொன்னியின் செல்வன் 2' படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
அமரர் கல்கியின் கைவண்ணத்தில் எழுதப்பட்ட, பொன்னியின் செல்வன் கதையை இரண்டு பாகங்களாக படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்தினம். பல்வேறு தடங்கல்களை மீறி, மிகப்பிரமாண்டமாக சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின், முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான நிலையில்.. இரண்டாம் பாகம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
அதன்படி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம், ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என இப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அறிவித்த நிலையில், த்ரிஷா பல்வேறு கெட்டப்பில் குந்தவையாக இருக்கும் புகைப்படங்களை வீடியோவாக வெளியிட்டு விரைவில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
சற்று முன்னர் இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில்... 'ஆக நக' என்கிற லிரிக்கல் பாடல், மார்ச் 20-ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் தகவல் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் திரிஷா கையில் வாளுடன் நிற்பது போன்றும், அவர் முன்பு வந்திய தேவனாக நடித்திருக்கும் கார்த்தி கண்களை கட்டியபடி மண்டியிட்டு அமர்ந்திருப்பது போன்றும் உள்ளது. எனவே இது திரிஷா மற்றும் கார்த்தி சம்மந்தப்பட்ட பாடலாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
இப்படத்தில் ராஜராஜ சோழனாக நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திருஷாவும், வந்திய தேவனாக கார்த்தியும், கரிகாலனாக விக்ரமும் நடித்துள்ளனர். மேலும் நடிகர் சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, அஸ்வின் கக்குமான்னு, ஜெயசித்ரா, சோபிதா துலிபாலா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.