ஹீரோயினாக கூட நடிக்க வேண்டாம்... வாய்ப்பு கொடுத்த லெஜெண்ட் சரவணன்! முடியாது என கூறிய நயன்! பிரபலம் கூறிய தகவல்
லெஜெண்ட் சரவணன் தன்னுடைய படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்தது குறித்து 'தி லெஜெண்ட்' படத்தின் இயக்குனர்களான, ஜேடி - ஜெர்ரி பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பொதுவாக தொழிலதிபர்கள் அவர்களின் பாணியில் பேசியபடி விளம்பரங்களில் தோன்றினாலும், ஆட்டம்- பாட்டம் என ஹீரோவை போல் அமர்களப்படுத்துவது அரிதானதே. அந்த வகையில், சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் ஆடை விளம்பரங்களில் ஆட்டம் - பாட்டம் என பட்டையை கிளப்பி பிரபலமானவர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் அருள்.
இவர் ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நாயகிகளுடன் விளம்பரங்களில் தோன்றியது, ஒரு சில விமர்சனங்களுக்கு ஆளான போதிலும்... அதையே தன்னுடைய பிரபலத்திற்கு பயன்படுத்திக் கொண்ட சரவணன் அருள், மிக குறுகிய காலத்திலேயே ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார்.
தன்னுடைய விளம்பரங்களை இயக்கிய, ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில், இவர் நடித்த தி லெஜன்ட் திரைப்படம் கடந்த ஆண்டு, திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட் அடிக்காமல் போனது.
இதைத்தொடர்ந்து விரைவில் தன்னுடைய இரண்டாவது படம் குறித்து சரவணன் அருள் அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்கு ஏற்ற போல், இவர் கடந்த சில தினங்களுக்கு முன் புது கெட்டப்பில் வெளியிட்ட புகைப்படங்கள் படு வைரலாக பார்க்கப்பட்டது.
இவர் நடித்த 'தி லெஜன்ட்' படத்தில் ஹீரோயினாக நடிக்க, நடிகை நயன்தாராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அவர் நடிக்க முடியாது என கூறியதாகவும் சில தகவல்கள் வெளியாகின. இது குறித்து முதல் முறையாக இயக்குனர்கள் ஜேடி - ஜெர்ரி பேட்டி ஒன்றில் கூறும்போது, நயன்தாராவுக்கு இப்படத்தில் நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டது உண்மைதான் என்றும் ஆனால், ஹீரோயினாக நடிக்க அழைப்பு விடப்படவில்லை. மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவே கேட்டதாக கூறியுள்ளனர். இந்து தகவல் தற்போது வைரலாகி வருகிறது.