நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில் பல்வேறு கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.  நாடாளுமன்ற தேர்தலில் மறைந்த நடிகரும், முன்னாள் அமைச்சருமான அமரீஷின் மனைவி, சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அதே தொகுதியில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் மிகுந்த போட்டி நிலவி வருகிறது.

மேலும் மற்ற கட்சிகளை சேர்ந்தவர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள, சுமலதா விற்கு கே ஜி எஃப் படத்தில் ஹீரோவாக நடித்த யாஷ் மற்றும் கர்நாடக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், நடிகர் யாஷுக்கு அரசியல் கட்சி ஒன்றிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. ஆனால் இதற்கெல்லாம் தான் அஞ்சமாட்டேன் தொடர்ந்து பிரச்சாரம் செய்வேன் என அதிரடியாக கூறியுள்ளார் நடிகர் யாஷ்.