தமிழ் சினிமாவுக்கு தனி அடையாளம் கொடுத்த இயக்குநர்களில் மிக முக்கியமானவர் பார்த்திபன். அவர் இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பரிணமித்து, பட் படார் வித்தியாச ரசனைகளுக்கு தமிழ் சினிமாவை அடிமையாக்கினார். யூகிக்க முடியாத டெரர் திருப்பங்கள் மட்டுமல்ல, யூகிக்கவே முடியாத ஜனரஞ்சகமான வித்தியாசமான காட்சிகள்தான் பார்த்திபனின் பலமே. 

சினிமாவில் மட்டுமல்ல சொந்த வாழ்க்கையிலும் இவர் வித்தியாசமான ஆள்தான். தான் பெற்ற குழந்தைகளோடு சேர்த்து ஒரு தத்துப் பிள்ளையையும் பாசத்தைக் கொட்டி வளர்த்தார். பார்த்தியின் வாழ்க்கையில் சந்தோஷங்கள் மட்டுமல்ல, பஞ்சாத்துகள் பிரச்னைகள் பிரிவுகள் துயரங்கள் பணமுடைகளுக்கும் குறைச்சலேயில்லை. இயக்கி, ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் எனும் நிலையிலிருந்து இறங்கி வந்து சமீப காலமாக குணசித்திர ரோல்களிலும் ரவுசு பண்ணிக் கொண்டிருக்கிறார் மனிதர். 

இவரும் படத்தில் இருந்தால் படம் ஹிட்! என்று ஒரு சென்டிமெண்ட்  இருப்பதால் பார்த்தியை வில்லன், ஹீரோவின் நெருங்கிய ஆத்மா என ஏதோ ஒரு கனமான கேரக்டரில் உள்ளே புகுத்துகின்றனர் இயக்குநர்கள். ஆக கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரத்துக்கு பிரச்னையில்லாமல் போய்க் கொண்டிருந்தது பார்த்தியின் பர்ஷனல் வாழ்க்கை. இந்நிலையில், சமீபத்தில் இவர் மீது கொலை முயற்சி புகார் ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது. இதை கொடுத்திருப்பவர் ஜெயங்கொண்டான் என்பவர். 

நியாயப்படி இந்த பிரச்னையில் பார்த்திபனுக்கு துணையாக அவரது நண்பர்கள் நின்றிருக்க வேண்டும். ஆனால் அவர்களோ இவர் மீது செம்ம கடுப்பில் இருக்கிறார்கள். ஏன்? என்று கேட்டால்....”இவரோட ஆஃபீஸ் இருக்கும் ஏரியாவுல அந்த ஜெயங்கொண்டான் நான் - வெஜ் ஹோட்டல் நடத்திட்டு இருக்கிறாருங்க. அங்கே அடிக்கடி போய் சாப்பிடுறது, அங்கேயிருந்து பார்சல் வாங்கிட்டு வர சொல்லி சாப்பிடுறதுன்னு இருந்தார் பார்த்தி. இந்த நட்பு கொஞ்சம் கொஞ்சமாக ஓவரா நெருக்கமாகி, ஒரு கட்டத்துல எல்லையை தாண்டி, அளவோடு இல்லாமல் போயிடுச்சு. தன்னோட லெவலை தாண்டி பழகினார், இடம் கொடுத்தார். நாங்க எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். ஆனால் எங்க வார்த்தையை கேட்கலை. இப்ப அனுபவிக்கிறார்.” என்கிறார்கள்.