உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்ஃபோனுடன் சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை தனது முகநூலில் பதிந்த நடிகை நிவேதா பெத்துராஜ் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு நடவடிக்கையாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்போனை எடுத்துச் செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வரக்கூடிய பக்தர்கள் தங்களுடைய மொபைல் போனை பாதுகாப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.10 கட்டணத்தில் மொபைல் போன் பாதுகாப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இங்கு வரக்கூடிய பக்தர்கள் செல்போன் கொண்டு வந்தால் தீவிர சோதனை செய்து அவர்களிடம் போலீஸார் கறார் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையைச் சொந்த ஊராகக்கொண்டவரும்  ’ஒரு நாள் கூத்து’, ’டிக் டிக் டிக்’, ’திமிரு பிடிச்சவன்’ உள்ளிட்ட படங்களில்  நடித்த பிரபல நடிகையுமான  நிவேதா பெத்துராஜ்,  நேற்று முன்தினம் மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார். அப்போது அவர் பொற்றாமரைக்குளம் உட்பட கோயிலின் சில இடங்களில் அமர்ந்து போட்டோக்களும், கோவில் உள்ளே உள்ள வளையல் கடையில் ஷாப்பிங் செய்த வீடியோக்களையும் தனது முகநூல் பக்கங்களில் வெளியிட்டிருந்தார். மொபைல் போன் கொண்டு செல்வதற்கான நீதிமன்ற தடை அமலில் இருக்கும் நிலையில் நடிகை என்பதால் நிவேதிதாவிற்கு மட்டும் சலுகை காட்டப்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நிவேதா பெத்துராஜின் பேஸ்புக் பதிவிலேயே ரசிகர்கள் பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர்.. ஆனால் துவக்கத்தில் அதைக்கண்டு பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் இருந்த நிவேதா பெத்துராஜ் சில மணி நேரங்களுக்குப் பின்னர் தனது முகநூல் பக்கத்திலிருந்த புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை டெலிட் செய்தார்.

இந்நிலையில் நிவேதா பெத்துராஜின் அத்துமீறல் தங்களுக்குப் புகாராக வந்துள்ளது என்று தெரிவித்த மதுரை காவல்துறை அதிகாரிகள், நடிகை என்பதற்காக அவருக்கு சலுகைகள் வழங்கப்படவில்லை. அவர் மீது கண்டிப்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தனர். ஸோ முகநூலில் அவருக்கு எதிராகப் பொங்குவதை கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாம்.