தி.மு.க.வின் முக்கியப் பேச்சாளராக மெல்ல மாறிவரும் மனுஷ்ய புத்திரன், தான் கடந்த 9 மாதங்களில் எழுதியுள்ள கவிதைகள் மட்டுமே 1000 பக்கங்களைத் தாண்டிவிட்டது என்று பீதி கிளப்பியுள்ள நிலையில்,’நீங்கள் எழுதுவதை கவிதை என்று யாரோ உங்கள் ஆழ்மனதில் நம்ப வைத்திருக்கிறார்கள்... இந்த மயக்கத்தில் இருந்து நீங்கள் விடுபட வேண்டும்’என்று எழுத்தாளர் கீற்று நந்தன் தரமான சம்பவம் ஒன்றைச் செய்துள்ளார்.

திமுகவுக்கு சொம்பு தூக்கும் நேரங்கள் தவிர்த்து அவ்வப்போது கவிதைகள் என்கிற பெயரில் விடாது எதையோ எழுதித்தள்ளிக்கொண்டிருந்த மனுஷ்யபுத்திரன் நேற்றைய முகநூல் பதிவு ஒன்றில் அவை கவிதைகள்தான் என்று உறுதி செய்தார். அது குறித்து எழுதிய பதிவில்,...ஜனவரியிலிருந்து இந்த செப்டம்பர்வரை எழுதிய கவிதைகள் 1000 பக்கங்களை கடந்துவிட்டது . இன்றுதான் புத்தக வடிவில் பிரிண்ட் அவுட் எடுத்துப்பார்த்தோம். நூறு நூறு உணர்ச்சிகள். நான்தானா இது என்று திகைத்துப்போய்விட்டேன். இப்படியும் ஒரு மனதோடு ஒருவன் வாழமுடியுமா ? நான் சொற்களைத்தவிர எதுவுமே இல்லை. இந்த உலகின் எந்த மூலையில் இருக்கும் யார் இந்தக் கவிதைகளைத் தொட்டாலும் ஏதேனும் ஒரு கவிதை அவர்கள் கண்ணிரின் ஒரு துளியாக குருதியின் ஒரு துளியாகவோ இருக்கும். எவ்வளவு கஷ்டங்களுக்கு நடுவே இதை எழுதினேன் என்பதை நினைக்காமலிருக்க முடியவில்லை.

அநேகமாக இதுவரையிலான என் வாழ்நாளில் நான் அதிக கவிதைகள் எழுதிய ஆண்டாக இதுவே இருக்கும். ஆம், இதுவேதான்.இந்த 1000த்தும் மேற்பட்ட பக்கங்களை கையில் வைத்திருக்கும்போது அவ்வளவு தனிமையாக இருக்கிறது அவ்வளவு தனிமையாக இருக்கிறது அவ்வளவு தனிமையாக இருக்கிறது’என்று 1001வது கவிதையையும் எழுதியிருந்தார்.

அவரது அந்தப் பதிவு பலரை பீதியில் ஆழ்த்தியுள்ள நிலையில்,...நீங்கள் ஒரு நல்ல உரைநடை எழுத்தாளர், பேச்சாளர்... ஆனால், நீங்கள் எழுதுவதை கவிதை என்று யாரோ உங்கள் ஆழ்மனதில் நம்ப வைத்திருக்கிறார்கள்... இந்த மயக்கத்தில் இருந்து நீங்கள் விடுபட வேண்டும். திராவிட இயக்கத்தினர் கவிதை எழுதி மரங்களை அழித்து விட்டார்கள் என்ற பழிச் சொல்லுக்கு நாம் ஆளாக வேண்டாம்...என்று எழுத்தாளர் கீற்று நந்தன் போட்டுத் தள்ளியுள்ளார்.