ஜாதி,மத, மொழி அரசியல்தாண்டி இசை ரசிகர்கள் அனைவரின் இதயத்திலும் ராஜ சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா வாங்கித் தருவதற்கு தங்கள் கட்சிக்கு ஓட்டுப்போடும்படி சின்னப்புள்ளத்தனமான ஒரு வேண்டுகோள் வைத்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சி.

அ.தி.மு.க.-பா.ஜ.க  தலைமையிலான கூட்டணியில் மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் பாமக தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. 7 தமிழர்கள் விடுதலை, கட்சத்தீவு மீட்பு, தேர்தல் சீர்திருத்தங்கள், பெண்கள் பாதுகாப்பு, திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல், பெண் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம், சுயமரியாதை திருமணம் என 37 தலைப்புகளில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியுள்ள பா.ம.க. அரசியலுக்கு அப்பாற்பட்டவரான ராஜாவுக்கு பாரத ரத்னா வாங்கித் தரப்படும் என்று குயுக்தியுடன் ஒரு வாக்குறுதியையும் சேர்த்துள்ளது.

அந்த தேர்தல் அறிக்கையின் 28 வது இடத்தில் இடம்பெற்றுள்ள அந்த வாக்குறுதியில்[ 28.] மக்களை மயக்கும் வகையிலான மண்ணின் இசையால் தமிழகத்தின் புகழை உலகம் முழுவதும் பரப்பியுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரதரத்னா விருது பெற்றுத்தர பா.ம.க. பாடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரத ரத்னா அல்ல பிரபஞ்ச ரத்னாவே பெறத்தகுதி உள்ளவர் இளையராஜா என்பதை இந்த நாடே அறியும் எனும்போது இப்படி ஒரு அரசியல் வாக்குறுதிக்குள் அவரை இழுத்துக்கொண்டு வந்து நிறுத்துவது நியாயமா டாக்டர்ஸ்?