’விவசாயிகள் தற்கொலை பிரச்சினையில் தொடங்கி நாட்டுல ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் இருக்கும்போது ஒரு நடிகையின் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு ஜோக் அடித்து சிரிப்பதா? என்று பிரதமரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

விஜய்யின் 'தமிழன்’ படத்தில் அறிமுகமான நடிகை பிரியங்கா சோப்ரா, இந்தியில் டாப் ஹீரோயினாக வலம் வந்து சில ஹாலிவுட் படங்களிலும் நடித்தார்.2008ம் ஆண்டு வெளியான ‘ஃபேஷன்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர். இவர் சில காலமாக அமெரிக்காவின் இளம் பாடகர் நிக் ஜோனஸை காதலித்து வந்தார். பிரியங்காவை விட 10 வயது குறைவான இளைஞரை அவர் காதலிப்பது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

ஆனால், அந்த விமர்சனங்களை காதில் ஏற்றிக் கொள்ளாத நடிகை பிரியங்கா, தனக்கு பிடித்த காதலனை இந்த டிசம்பர் 1ம் தேதி கிறிஸ்துவ முறைப்படியும், டிசம்பர் 2ம் தேதி இந்து முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார்.

ஜோத்பூர் அரண்மனையில் அரச திருமணமாக பயங்கர பொருட்செலவில் பிரியங்கா சோப்ராவின் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் வெடிக்கப்பட்ட வாணவேடிக்கைகள் ஜோத்பூர் நகரத்தின் இரவையே பிரகாசமாக்கியது. இந்த திருமண நிகழ்ச்சிக்கே பிரதமர் மோடி அழைக்கப்பட்ட நிலையில் அவரால் கலந்துகொள்ளமுடியவில்லை.

இந்நிலையில், நேற்று டில்லியில் உள்ள தாஜ் ஹோட்டலில் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் மற்றும் ஹாலிவு பிரபலங்கள் என பலர் கலந்து கொண்ட இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் பிரியங்காவுடனும் நிக் ஜோன்ஸுடன் பிரியமாக சிரித்தபடி உரையாடினார்.

இது தொடர்பான புகைப்படங்களை வலைதளங்களில் ஷேர் செய்துவரும் நெட்டிசன்கள் ‘நாட்டுல எவ்வளவோ பிரச்சினை இருக்கப்ப, இவருக்கு நடிகையோட ரிசப்ஷன்ல நகைச்சுவை என்ன வேண்டிக்கிடக்கு? என்று கிண்டலடிக்கிறார்கள்.