‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ படங்களின் நள்ளிரவுக் காட்சிகளை வெளியிடுவதில் ஏக்ப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டு அடிதடிகள் வரை சென்றிருக்கும் நிலையில், ‘பேட்ட’ படத்தின் தயாரிப்பாளர்கள் சிறப்புக்காட்சிக்கு அனுமதி கேட்டு கடிதமே தரவில்லை. அப்படத்தின் சிறப்புக் காட்சியை வெளியிட்ட தியேட்டர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார் செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ.

’பேட்ட’ படத்துக்கு தற்போதுவரை சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு கோப்பு வரவில்லை. அதனால் தரவில்லை. அப்படி யாரேனும் சிறப்புக் காட்சிகள் கேட்டு அணுகினால் அதை பரிசீலிப்போம் என்றார். ஆனால் நேற்று வெளியான பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரு படங்களுக்கும் அதிகாலையிலேயே சிறப்புக் காட்சிகள் நடைபெற்றன.

தமிழகம் முழுக்கவுள்ள பல திரையரங்குகளில் ரசிகர்கள் அதிகாலைக் காட்சிகளைப் பார்த்து சமூகவலைத்தளங்களில் விமரிசனம் எழுதி வருகிறார்கள். இந்நிலையில் ’பேட்ட’ படத்துக்குசிறப்புக்காட்சியை ஒளிபரப்ப அனுமதி தரவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் பேட்டியளித்த அவர்,’திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சிறப்புக் காட்சிகளை ஒளிபரப்பிய திரையரங்குகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அனுமதியின்றி சிறப்புக் காட்சிகளை ஒளிபரப்பிய திரையரங்குகளுக்கு ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  இனி இதுபோன்று திரையரங்குகள் அனுமதியின்றி சிறப்புக் காட்சிகளை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். 

‘பேட்ட’ மீது மட்டும் அவ்வளவு காட்டமான அமைச்சர் அஜீத்தின் ‘விஸ்வாசம்’ குறித்து மூச் விடவில்லை.