'பேட்ட' திரைப்படத்தை திருட்டுத்தனமாக சமூக வலைதளங்களில் வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் அதையும் மீறி தமிழ் ராக்கர்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது ரசிகர்களையும் படக்குழுவினரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இன்று பிரமாண்டமாக வெளியான திரைப்படம் 'பேட்ட'. இந்த படத்தை ரஜினி ரசிகர்கள் ஆரவாரத்தோடு வரவேற்றனர்.  படத்திற்கும் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.  ஒரு சிலர் பழைய ரஜினியை நினைவுபடுத்தும் வகையில் இந்த படம் இருப்பதாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை கூட இயக்குனர் கார்த்தி சுப்புராஜ், ட்விட்டர் மூலம் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் வைத்தார். அதில்   "படத்தின் கதையை யாரும் வெளியிட வேண்டாம் என்றும் திருட்டு விசிடிக்கள் வருவதை ஒழிக்க வேண்டும் என்று கூறி, இதே தினத்தில் வெளியாகும் 'விஸ்வாசம்' படத்திற்கும்  தன்னுடைய வாழ்த்தை தெரிவித்திருந்தார்.

மேலும் திருட்டுத்தனமாக படங்கள் லீக் செய்வதை தவிர்க்கும் வகையில் நீதிமன்றம், இணையதளங்களுக்கு தடை விதித்தது. அதே போல் திரையரங்கங்களில் செல்போனில் படம்பிடிப்பதை தவிர்க்கும் பொருட்டு,  போலீஸ் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது.

இவை அனைத்தையும் மீறி தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இன்று வெளியான பேட்ட படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது.   இதனால் ரஜினி  ரசிகர்களும் படக்குழுவினரும் கடும் அப்செட்டில் உள்ளனர். ஆனால் இதே தினத்தில் வெளியான விஸ்வாசம் படத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.