‘திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி,பழனி, திருவண்ணாமலை வழியாக  திருத்தணி வரை பயணித்த இயக்குநர் பேரரசுவின் சினிமா பயண பஸ் பிரேக் பிடித்த நிலையில் கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக செல்ஃப் எடுக்காமல் நிற்கிறது. தமிழகத்தின் மிச்ச சொச்ச ஊர்களின் தலைப்பில் அவர் படம் இயக்கத்தவிக்கும் தவிப்பை தமிழ்சினிமா ஹீரோக்கள் ஏனோ கண்டுகொள்ள மறுக்கிறார்கள்.

இந்த இடைவெளியில்  அஜீத்,விஜய் துவங்கி புதுமுகங்கள் வரை நூற்றுக்கணக்கான கதைகள் சொல்லியும் அடுத்த படம் கமிட் ஆகாத நிலையில், படங்களின் ஆடியோ வெளியீட்டுவிழா, ஜவுளிக்கடைகளுக்கு ரிப்பன் வெட்டுவது மற்றும் பூப்புனித நீராட்டுவிழா போன்றவற்றில் தவறாது தலைமை ஏற்று வீறு நடை போட்டுவருகிறார் பேரரசு.

அந்த வரிசையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கலந்துகொண்ட ‘வேறென்ன வேண்டும்’ பட இசைவெளியீட்டு  நிகழ்ச்சியில் தன்னிடம் கதை கேட்க மறக்கும் ஹீரோக்களை ஒரு பிடிபிடித்தார் பேரரசு.

‘முன்பெல்லாம் கதாநாயகர்களுக்கு இயக்குநர்களான நாங்கள் கதை சொல்லிக்கொண்டிருந்தோம். அவர்கள் கேட்டு நடித்தார்கள். இப்போதெல்லாம் அவர்களுக்கு இயக்குநர்களிடம் கதை கேட்பதற்கு நேரம் இல்லை. கிடைக்கிற மேடைகளில் அவர்களே கதை சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள்’ என்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார்.

கடைசியாக நடந்த ‘சர்கார்’ ஆடியோ நிகழ்ச்சியில் இவரது முன்னாள் ஆஸ்தான ஹீரோ விஜய் அரசியல் கதை சொன்னதையும், தனது நான்குக்கும் மேற்பட்ட கதைகளை ரிஜக்ட் செய்த்தையும் மனதில் வைத்துதான் பேரரசு மறைமுகமாக விஜயை இப்படி காய்ச்சி எடுக்கிறார் என்கிறார்கள் விசயம் அறிந்தவர்கள்.