’பயபுள்ள’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள சிவா என்ற புதுமுக நடிகப் பயபுள்ள , மனைவி குழந்தைகளை நடுரோட்டில் தவிக்க வைத்துவிட்டுப் பட்டதாரி பெண்ணுடன் தலைமறைவாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியை பூர்வீகமாக கொண்ட சிவா, சென்னை ராமாவரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். ’பயபுள்ள’என்ற உப்புமா படத்தின் ஹீரோவான இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வராவிட்டாலும் குடியிருந்த பகுதியில் பெரிய ஹீரோ ரேஞ்சுக்கு  பில்டப்பாக வாழ்ந்துவந்தார்.

மனைவி இரு குழந்தைகளுடன் வசித்து வந்த சிவா, பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைபடங்களை காட்டி பக்கத்து வீட்டில் வசித்து வந்த பி.இ. பட்டதாரி பெண்ணை வர்ணித்து மயக்கி உள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்தியதாக கூறப்படுகின்றது.

இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவர அந்த பெண்ணை கண்டித்துள்ளனர். இந்த நிலையில் புத்தாண்டுக்கு முன்பாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்ட சிவா, தனது மனைவி குழந்தைகளை தவிக்க விட்டு, அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகின்றது.

தங்கள் மகளை காணவில்லை என்று அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் சிவா, தனது மனைவியை பிரிந்து வாழ்வது போல நடித்து அந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்தியது தெரியவந்துள்ளது.

தான் பயன்படுத்தும் செல்போன் மூலம் காவல்துறையினர் தங்களை கண்டு பிடித்து விடாமல் இருக்க சிவா, தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளதாகவும் , கடைசியாக நெல்லை மாவட்ட எல்லையில் போன் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சிவா தனது நண்பர்கள் அதிகமாக இருக்கும் பகுதிக்கு அந்த பெண்ணை அழைத்து சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கும் காவல்துறையினர் இருவரது படங்களையும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி தேடி வருகின்றனர்.

ஏற்கனவே திருமணமான சிவா, தங்கள் மகளை மயக்கி அழைத்துச்சென்றதால், தங்கள் மகளின் எதிர்காலமே வீணாகி விட்டதாக கண்ணீர் வடிக்கும் பெண்ணின் குடும்பத்தினர்  விரைவாக தங்கள் மகளை மீட்டுத்தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.