அரசியலை விட்டு ஒதுங்கும் அண்ணன், தம்பி... மீண்டும் சினிமாவில் கூட்டாக களம் இறங்க ஐடியா...  மெகா ஸ்டார் குடும்பத்தின் அதிரடி முடிவு...!

தெலுங்கில் மெகா ஸ்டார் குடும்பத்திற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.  பவர் ஸ்டார் பவன் கல்யாண், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் என மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்தில் உள்ள ஸ்டார்களுக்கு பஞ்சமில்லை. அண்ணன் சிரஞ்சீவியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பிரஜா ராஜ்யம் கட்சியிலிருந்து விலகிய பவன் கல்யாண், ஜன சேனா என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கி பிறகு அண்ணன் சிரஜ்சீவியைப் போன்றே, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தினார் பவன் கல்யாண். தற்போது நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ஜன சேனா கட்சி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. 

ஏற்கனவே தனது கட்சியை காங்கிரஸ் உடன் இணைத்துவிட்ட சிரஞ்சீவி, சமீபத்தில் "சைரா நரசிம்மா ரெட்டி" என்ற படத்தில் நடித்தார். கதை மற்றும் காட்சி அமைப்புகள் குறித்து கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையில் தோன்றிய மெகா ஸ்டாரை மக்கள் கொண்டாடினர். படமும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்தது. என்னதான் மோதல் காரணமாக கட்சி ஆரம்பித்தாலும் சில விஷயங்களில் அண்ணனை ஃபாலோ செய்பவர் பவன். அரசியலைப் போலவே அண்ணனை பின்பற்றி மீண்டும் சினிமாவில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற "பிங்க்" திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அமிதாப் பச்சன், அஜித் குமார் நடித்த மாஸ் கேரக்டரில், பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பதை கேள்விப்பட்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். பிரபல இயக்குநர் ஸ்ரீராம் வேணுகோபால் இயக்க உள்ள அந்த படத்தை, போனி கபூர் தயாரிக்க உள்ளார்.  

இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் வெளியான "லூசிபர்" படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ளதாக, அப்படத்தின் இயக்குநர் ப்ரித்விராஜ் அறிவித்திருந்தார். ஒரு தலைவரின் மரணத்திற்கு பிறகு அந்த கட்சியை தன் வசப்படுத்த யாரெல்லாம் முயல்கிறார்கள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் "லூசிபர்". இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த ஜோசப் கதாபாத்திரத்தில், மெகா ஸ்டார் சிரஞ்சீவியும், அவரது மகனாக ராம் சரணும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்ரித்விராஜ் அறிவிப்பை வெளியிட்டதில் இருந்தே படம் குறித்து பல்வேறு  வதந்திகள் வட்டமிட்டு வரும் நிலையில்,  படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவியும், பவன் கல்யாணும் "சைரா நரசிம்மா ரெட்டி" படத்தின் போது சந்தித்துக் கொண்டனர். அந்தப் படத்தின் அறிமுக காட்சிக்கு தெலுங்கில் பவன் கல்யாண் தான் பின்னணி குரல் கொடுத்திருந்தார். பவன் கல்யாண் டப்பிங் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் செம வைரலானது. அப்போதே இருவரும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்ற ரசிகர்கள் எண்ண ஆரம்பித்தனர். இந்த சமயத்தில் தான் "லூசிபர்" படத்தில் இருவரும் ஒன்றாக இணைய உள்ளதாக தெரியவந்துள்ளது. வதந்தியாக பரவி வரும் இந்த செய்தி உண்மையானால் தெலுங்கு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.