சிலருக்கு அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக்கொண்டு அடிக்கும் என்று சொல்வார்களே அப்படி ஒரு அதிர்ஷ்டத்துக்கு சொந்தக்காரராகி வருகிறார் ‘ஆஹா கல்யாணம்’என்கிற ஒரே தொடர் மூலம் பயங்கர பிரபலமாகியிருக்கும் பவி டீச்சர். தளபதி 64 படத்தைத் தொடர்ந்து ஜீ.வி.பிரகாஷின் புதிய படம் ஒன்றிலும் ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கிறார் அவர்.

கடலோரக் கவிதைகளின் ஜெனிஃபர் டீச்சர், மலையாள பிரேமம் படத்தின் மலர் டீச்சர்களுக்கு இணையாக சமீபத்திய ஃபேமஸ் டீச்சர் என்றால் அது பவி டீச்சர்தான். ‘ஆஹா கல்யாணம்’என்கிற தொடர் மூலம் இளைஞர்களைச் சுண்டி இழுத்த அவருக்கு திடீரென லட்சக்கணக்கில் காதலர்கள் முளைத்தார்கள். இந்நிலையில் திடீர் அதிர்ஷ்டமாக அவருக்கு ‘தளபதி 64’படத்தில் ஒரு நல்ல வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக செய்திகள் பரவின. அது இன்னொரு ஹீரோயின் கேரக்டரா அல்லது நாயகியின் தோழி பாத்திரமா என்று தெரியவில்லை.

இந்தத் தகவலும் இண்டஸ்ட்ரியில் காட்டுத் தீயாய்ப் பரவவே இசையமைப்பாளரும் பிசி ஹீரோவுமான ஜீ.வி.பிரகாஷ் பவி டீச்சரை நேரில் வரவழைத்து தான் அடுத்து நடிக்கவிருக்கும் ஒரு படத்துக்கு அப்பட இயக்குநரின் ஹீரோயினாக சிபாரிசு செய்ய அதுவும் உடனே ஓ.கே.ஆகிவிட்டதாம். யார் கண்டது 2020ல் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இந்த பவி டீச்சர் வந்து நின்றால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை.