பாட்டுத்தலைவனுக்கு பிறந்தநாள்! பாமரனையும் கவர்ந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பற்றிய ஆச்சர்ய தகவல்கள்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனாரின் பிறந்த தினமான இன்று அவரைப்பற்றியும், அவர் எழுதிய காலத்தால் அழியாத பாடல்களைப் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

pattukottai kalyanasundaram birthday special here the unknown facts about the legend

சினிமாவில் படிக்காத மேதைகள் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். பள்ளி படிப்பை தாண்டாத கவியரசருக்கு முன்னோடி இவர். உண்மையான பொதுவுடைமைவாதி. குறுகிய காலமே வாழ்ந்தாலும் வாழ்க்கையில் பெரும்பகுதியை வறுமையில் கழித்து சமூக அவலங்களுக்கு எதிராக பாடல் வரிகளால் சாட்டை சுழற்றியவர். 

பட்டுக்கோட்டையில் திண்ணைப் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே படித்தாலும் பிறவியிலேயே கவிஞானம் பெற்றவர். தனது 15 வயதிலேயே கவிதை எழுதத் துவங்கியவர். புதுவை கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் 'குயில்' பத்திரிகையில் பணிக்கு சேர்ந்து அ.கல்யாண சுந்தரம் என்ற பெயரை அகல்யா என்ற புனை பெயருடன் எழுத துவங்கினார். அவருக்கு எழுதவும் கவிதை வடிக்கவும் கற்றுக் கொடுத்தவர் பாரதிதாசன் தான். பட்டுக்கோட்டையாருக்கு எல்லாமே பாரதி தாசன் தான். பட்டுக் கோட்டையாரின் திருமணம் கூட பாரதிதாசன் தலைமையில் தான் நடந்தது.

பட்டு்கோட்டையாரின் தந்தையும் கும்மி பாடல்கள் எழுதுவதில் சிறந்தவர். அதனால் தானோ என்னவோ, பட்டுக் கோட்டையாரும் பாடல்களை சந்த நயத்துடனேயே எழுதுவார்.

நாடகம், நடிப்பு, பாடல் என இருந்தாலும் அவரது வயிறு ஒருபோதும் நிரம்பியதில்லை. தோழர் ஜீவா வாயிலாக 'ஜனசக்தி' பத்திரிகையிலும் வேலை பார்த்திருக்கிறார். பல இன்னல்களுக்கு இடையே 25ஆவது வயதில் சினிமா பாடலாசிரியர் ஆனார், பட்டுக்கோட்டையார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் அவரது பாட்டுக் கோட்டை தான்.

படித்த பெண் (1956) என்ற படத்துக்கு பாடல் எழுதினாலும் முதலில் ரிலீசானது அவர் இரண்டாவது பாடல் எழுதிய மகேஸ்வரி (1955) படம் தான். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 60 படங்கள். 250 பாடல்கள். எம்ஜிஆருக்கு 7 படங்கள், சிவாஜிக்கு 11 படங்கள் என பாடல்களை எழுதி தள்ளினார் பட்டுக் கோட்டையார்.

நாடோடி மன்னன், மகாதேவி, சக்கரவர்த்தி திருமகள், அரசிளங்குமரி, திருடாதே, கலை அரசி, விக்கிரமாதித்தன் இப்படி எம்ஜிஆருக்கு. அம்பிகாபதி, புதையல், பாகப் பிரிவினை, மக்களை பெற்ற மகராசி இப்படி சிவாஜிக்கு. கல்யாண பரிசு மாதியான காதல் ரச படங்களில் ஜெமினிக்கு. இது மாதிரியாக பட்டுக் கோட்டையாரின் வரிகள் தமிழ் சினிமாவில் சுழன்றடித்தன. 

இதையும் படியுங்கள்... கலாஷேத்ரா விவகாரம்: நல்லகுடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும் ஆண்ட்டி? குட்டிபத்மினிக்கு அபிராமி பதிலடி

"திருடாதே பாப்பா திருடாதே வறுமை நிலைக்கு பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே...,"

"தூங்காதே தம்பி தூங்காதே பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலை எல்லாம் தூங்குதப்பா...,"

"சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாக கூட நம்மி விடாதே நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே..."

"குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா..."  

"மனுசன் பொறக்கும்போது இருந்த குணம் போகப்போக மாறுது, எல்லாம் இருக்கும்போது போன குணம் இறக்கும்போது வந்து சேருது... 

"பட்டப் பகல் கொள்ளையரை எல்லாம் பட்டாடைதான் மறைக்குது..."

" சும்மா கிடந்த நிலத்த கொத்தி சோம்பல் இல்லாம ஏர கூட்டி..

"ஏற்றமுன்னா ஏற்றம் அதில் இருக்குது முன்னேற்றம்.. விதியை எண்ணி வீழ்ந்து கிடக்கும் வீணர் எல்லாம் மாறணும்... ஆதி மகள் அவ்வை சொல்லை அலசி பார்த்தா மனசில நீதி என்ற நெல் விளையும் நெரிஞ்சி படர்ந்த தரிசிலே..." இவை எல்லாம் எம்ஜிஆரின் ஆரம்ப கால படங்களுக்கு பட்டுக் கோட்டையார் எழுதிய வரிகள்.

pattukottai kalyanasundaram birthday special here the unknown facts about the legend

எல்லாவற்றுக்கும் மேலாக 'நாடோடி மன்னன்' படத்தில் "நமக்கு காலம் இருக்குது பின்னே, சேரிக்கும் இனி இன்பம் திரும்புமடி, நானே போடப்போறேன் சட்டம் அது நன்மை புரிந்திடும் திட்டம் நாடு நலம்பெறும் திட்டம் "  என்ற வரிகள் எல்லாம் எம்ஜிஆருக்கு தீர்க்க தரிசனமாக அமைந்தவை.

இதையும் படியுங்கள்... 10 நிமிடம் அட்ஜஸ்மெண்ட் செஞ்சா... லேடி சூப்பர்ஸ்டார் மகளாக நடிக்க வாய்ப்பு - நடிகை மாளவிகா பகீர் புகார்

 அதனால்தான் முதல்வரானதும் "எனது முதல்வர் நாற்காலியில் மற்ற மூன்று கால்கள் எப்படியோ தெரியாது. ஒரு கால் நிச்சயமாக பட்டுக்கோட்டையார் தான்" என கூறினார், எம்ஜிஆர். எம்ஜிஆருக்கு மட்டுமல்ல மற்றவர் படங்களிலும் பட்டுக்கோட்டையாரின் சாட்டை வரிகள் சுழன்றன. 

"வெறும் திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கனும் அண்ணாச்சி...," 

"குட்டி ஆடு தப்பி வந்தா கொறவனுக்க சொந்தம் தட்டுக் கெட்ட மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்..."

"மனுஷன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே..."

"கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியலியே..." இப்படி பாடல்களால் வெளுத்து வாங்கியவர் பட்டுக் கோட்டையார். 

அவரே தான் கைத்தறிக்காக.. "சின்ன சின்ன இழை பின்னி பிணைந்து சித்திர கைத்தறி சேலை அணிந்து..." என பாடல் எழுதினார். இப்படியே பட்டுக்கோட்டையாரை அடக்கி விட முடியாது. 

சவுபாக்கியவதி படத்தில் "கங்கை அணிந்தவா கண்டோர் தொழும் நாதா தில்லையம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா..."

'பாகப்பிரிவினை'  படத்தில் "பானை வயிற்றோனே பக்தர்களை காப்பவனே மூலப் பொருளோனே... கணேசா..."

'பதி பக்தி' படத்தில் "ஓங்கார ரூபி நீ ஆங்கார மோகினி..." என பக்தியிலும் புகுந்து விளையாடி இருப்பார். 

இது ஒரு புறம் இருக்க, 'ஆரவல்லி' படத்தில் "சின்னக்குட்டி நாத்தனா சில்லறைய மாத்தினா குன்னக்குடி போகும்  கூண்டு வண்டில குடும்பத்தையே ஏத்துனா..." என நையாண்டி பாடலும் அவர்தான்.

இன்றளவும் காதலின் பெருமை பேசும் 'கல்யாண பரிசு' படத்தின் காதல் ரசம் சொட்டும் அனைத்து பாடல்களையும் எழுதியவர் பட்டுக் கோட்டையார்தான். அந்த படத்தில், "துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதையை சொல்லும்..."

"ஆசையினாலே மனம்  அஞ்சுது கெஞ்சுது தினம்..."  

"வாடிக்கை மறந்ததும் ஏனோ..." என காதல் வரிகளை எழுதியவர் அவரே.
 
அதே படத்தில், "காதலிலே தோல்வியுற்றான் காளை யொருவன் காலம் கடந்த பின்னே அமைதி எங்கு பெறுவான்... அன்பு மயில் ஆடலுக்கு மேடை அமைத்தான் துன்பம் எனும் நாடகத்தை கண்டு ரசித்தான்..." என்ற காதல் தோல்வி வரிகளும் அவரே. 

"முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தில் பவளத்தின் நிறம் பார்க்கலாம்..." என காதலியை வருணீப்பதிலும் பட்டுக்கோட்டையாரை யாரும் மிஞ்ச முடியாது.

வெறும் ஐந்து ஆண்டுகளில் தமிழ்  சினிமாவுக்காக  பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல்கள் அனைத்துமே சாகா வரம் பெற்றவை. தேசிய கவி பாரதி  போலவே புதுச்சேரியில் பட்டை தீட்டப்பட்டவர், பாரதி போலவே சமூக சீர்திருத்த பாடல்களை எழுதி வைத்து விட்டு, அவர் போலவே சிறு வயதிலேயே மறைந்து போனார், இந்த மக்கள் கவிஞர். சைனஸ் பிரச்சினை, மூளையில் ரத்தக்கட்டு என 29 வயதிலேயே விண்ணுலகம் சென்று விட்டார், பட்டுக்கோட்டையார். 

இதையும் படியுங்கள்... அம்பேத்கர் பிறந்தநாளுக்கு இத செய்யணும்..மக்கள் இயக்கத்திற்கு விஜய் பிறப்பித்த உத்தரவு! பரபரக்கும் அரசியல் களம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios