அரசியல் த்ரில்லரான இந்த படத்தை அறிமுக இயக்குநரான டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ளார். இதில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பிக்பாஸ் சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 96 படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிய கோவிந்த் வசந்தா இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார். அதேபோல் நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு பார்த்திபன் - விஜய்சேதுபதி கூட்டணி இணைந்துள்ளது. 

கடந்த ஜூலை மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டிய நிலையில், இரு தினங்களுக்கு முன்பு டீசர் வெளியிடப்பட்டது. அதில் சீமானை சீண்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அரசியல்வாதியாக நடித்துள்ள பார்த்திபனுக்கு ராசிமான் என பெயர் வைத்துள்ளது டீசரில் காட்டப்படும் போஸ்டர்கள் மூலமாக உறுதியாகியுள்ளது. அதேபோல் அவருடைய கட்சிக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சியின் பிரதான கலரான சிவப்பு மஞ்சள் சிவப்பு கலர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால் சீமானை கலாய்த்ததாக கூறி நாம் தமிழர் தம்பிகள் சோசியல் மீடியாவில் கொந்தளிக்க ஆரம்பித்தனர்.  நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வெற்றிக்குமரன் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், அண்ணன் சீமானை களங்கப்படுத்துவது போன்ற காட்சிகளை நீக்குவதாக தயாரிப்பாளர் லலித்குமார் உறுதியளித்துள்ளதாகவும், இருப்பினும் இம்மாதிரியான காட்சிகளை எடுத்த இயக்குனர் மற்றும் இதில் நடித்த நடிகர்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தக்காட்சிகளோடு இப்படம் திரைக்கு வருமாயின் உலகம் முழுதும் ஒரு காட்சிகூட திரையரங்குகளில்  ஓடாது என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக்கொள்கிறோம். இழவு வீட்டில் இருக்கும் எங்களிடம் வந்து வம்பிழுக்கும் வேலையை விடுங்கள்.. இல்லையேல் இந்தக் கலைத்துறையிலிருந்து வெகுவிரைவில் அப்புறப்படுத்தப் படுவீர்கள் என எச்சரிக்கும் தோணியிலும் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு வைரலாகி வந்த நிலையில், நடிகர் பார்த்திபன் நாம் தமிழர் கட்சியின் குற்றச்சாட்டிற்கு விளக்கமளித்துள்ளார். 


பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், நண்பர் சீமான் அவர்களிடம் நேரிடையாக துக்ளக் தர்பார்குறித்து விளக்கமளித்து விட்டேன். அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார். ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டுமென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன். இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல. (புதிய பாதை நமது)இருப்பினும் இடையராது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடைய போராடும்’நாம் தமிழர்’ தோழர்களின் முயற்சிகளை கிண்டல் செய்ய நான் இடம் தர மாட்டேன். எனவே உள்நோக்கமின்றி நடந்த பெயர் பிரச்சனையை இயக்குனரிடம் கூறி, ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.