‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்குப் பின் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி ஆகிய இருவரில் ஒருவரை வைத்து, அல்லது இருவரையும் சேர்த்து டபுள்ஹீரோ சப்ஜெக்ட் படம் இயக்கித் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்த இயக்குநர் பாண்டிராஜ் திடீரென சிவகார்த்திகேயனோடு கைகோர்த்தார். இதனால் செல்ஃபி எடுக்க முயலும் ரசிகர் மேல் எவ்வளவு கோபம் வருமோ அதைவிட அதிக கோபத்தில் உள்ளது சிவக்குமார் குடும்பம்.

சிவகார்த்திகேயனை நடிகராக அறிமுகம் செய்தவர் இயக்குநர் பாண்டிராஜ். 'மெரினா' மற்றும் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணிபுரிந்துள்ளனர். அதற்குப் பிறகு இருவரும் இணைந்து பணிபுரியவே இல்லை. ஆனால், இருவரும் அளித்த பேட்டிகளில் மீண்டும் இணைவோம் என்று மட்டுமே குறிப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

2018-ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'கடைக்குட்டி சிங்கம்' படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். துவக்கத்தில் அக்கதையை சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி ஆகிய இருவரில் ஒருவரை வைத்து, அல்லது இருவரையும் சேர்த்து டபுள்ஹீரோ சப்ஜெக்ட் படம் இயக்கித் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தார் இயக்குநர் பாண்டிராஜ்.

ஆனால் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘தேவ்’ படம் படுதோல்வி அடைந்ததால் பாண்டிராஜின் மனசு மாறியது. இன்னொரு பக்கம் சூர்யாவின் கால்ஷீட் ஆகஸ்டுக்குப் பின்னரே கிடைக்கும் என்றும் அவருக்குத் தெரிவிக்கப்படவே இருவரையும் ஒரே நேரத்தில் கைகழுவ முடிவெடுத்தார்.

இந்நிலையில் அவர் முடித்து வைத்திருந்த கதையில் நடிக்க சிவகார்த்திகேயன் சம்மதம் தெரிவிக்கவே, அதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. பட்ஜெட் விஷயங்கள் பேச்சுவார்த்தையும் சுமூகமாக முடியவே, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பாண்டிராஜ் - சிவகார்த்திகேயன் கூட்டணி படத்தை தயாரிக்கிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது, சிவகார்த்திகேயனுடன் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் தேர்வில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் பாண்டிராஜ். விரைவில் எப்போது படப்பிடிப்பு உள்ளிட்ட விஷயங்களை அறிவிக்கவுள்ளது படக்குழு.