உலக நாயகன் கமல் ஹாசனுக்கு அடுத்ததாக சினிமாவிற்காக எதையும் செய்யத் தயங்காதவர் பாலிவுட் நடிகர் அமீர் கான். உடலை முறுக்கேற்றி சிக்ஸ் பேக்ஸ் வைக்கச் சொன்னாலும் சரி, குண்டாக தொப்பை வைத்து நடிக்கச் சொன்னாலும் சரி, இல்ல ஆளே அடையாளம் தெரியாமல் இளைத்து போகச் சொன்னாலும் சரி தசாவாதாரத்திற்கு தயாராக நிற்பார். பாலிவுட் படங்களில் பல புதுமையான முயற்சிகளையும், கதைகளையும் முயற்சி செய்வதில் முதன்மையானவர். நடிப்பு ராட்சசனான அமீர்கான் தனது படத்திற்காக தோற்றத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வார். 

அப்படி அமீர் கான் போடாத கெட்டப்புகள் இல்லை, இந்தியா முழுவதும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இப்படிப்பட்ட அருமை, பெருமைகளுக்கு எல்லாம் சொந்தக்காரரான அமீர் கானை பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்று கொலை குற்றவாளி என செய்தி ஒளிப்பரப்பு செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 


பாகிஸ்தானைச் சேர்ந்த் எம்.க்யூ.எம். தலைவர் அமீர் கான் என்பவரை கொலை குற்றவாளி என்று செய்தி ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் போது, இந்தி நடிகர் அமீர் கானின் புகைப்படம் திரையில் காட்டப்பட்டுள்ளது. அப்போது பணியில் இருந்தவர்கள் உடனடியாக அந்த தவறை கவனித்து, சில நிமிடங்களிலேயே போட்டோவை மாற்றியுள்ளனர். 

இருந்தாலும், சில நிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்பான அந்த வீடியோ காட்சி மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனால் அமீர் கான் ரசிகர்கள் செம்ம கடுப்பில் உள்ளனர். இந்தியாவில் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பினாலும் தங்களது தரப்பில் ஏற்பட்ட தவறுக்கு தொலைக்காட்சி நிர்வாகம் எவ்வித விளக்கமும் கொடுக்காதது குறிப்பிடத்தக்கது.