சல்மான் கான் தீவிரவாத கண்காணிப்பு பட்டியலில் சேர்த்ததாக வெளியான செய்தி குறித்து பாக். அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்புக் குழு தெளிவுபடுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கானை பாகிஸ்தான் தீவிரவாதியாக அறிவித்ததாக செய்திகள் வெளியாகின. பலுசிஸ்தான் குறித்த அவரது கருத்திற்குப் பிறகே இது நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த விவாகரம் தொடர்பாக தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.

மௌனம் கலைத்த பாக். அமைச்சகம்

சல்மான் கானை தீவிரவாத கண்காணிப்பு பட்டியலில் சேர்த்ததாக வெளியான செய்தி குறித்து பாக். அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்புக் குழு தெளிவுபடுத்தியுள்ளது. பலுசிஸ்தான் பற்றி குறிப்பிட்ட பிறகு, சல்மான் கான் பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் நான்காவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு, தீவிரவாதிகளுக்கு உதவுபவர் என முத்திரை குத்தப்பட்டதாக வதந்தி பரவியது. 

இதுகுறித்த, பாக். அமைச்சகத்தின் விளக்கம் பின்வருமாறு : “தேசிய பயங்கரவாத எதிர்ப்பு ஆணையத்தின் தடைசெய்யப்பட்ட நபர்கள் பக்கத்திலோ, உள்துறை அமைச்சகத்தின் அல்லது மாகாண உள்துறை துறையின் அரசிதழிலோ சல்மான் கானை நான்காவது அட்டவணையில் சேர்த்ததாக பாகிஸ்தான் அரசின் எந்த அறிக்கையோ, அறிவிப்போ, ஆவணமோ இல்லை”. எனவே, இது தொடர்பான செய்திகள் போலியானவை என பாக். அமைச்சகம் விளக்கியுள்ளது.

சல்மான் கான் என்ன சொன்னார்?

இந்த மாத தொடக்கத்தில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த ஜாய் ஃபோரம் 2025-ல் ஷாருக் கான் மற்றும் அமீர் கானுடன் சல்மான் கான் மேடையைப் பகிர்ந்து கொண்டார். அங்கு, மேற்கு ஆசியாவில் இந்திய நட்சத்திரங்களுக்கான வரவேற்பு குறித்து சல்மான் கான் பேசியதாவது- “நீங்கள் ஒரு இந்திப் படத்தை தயாரித்து இங்கே (சவுதி அரேபியாவில்) வெளியிட்டால், அது சூப்பர் ஹிட்டாகும். நீங்கள் தமிழ், தெலுங்கு அல்லது மலையாளப் படங்களைத் தயாரித்தால், கோடிக்கணக்கில் வியாபாரம் நடக்கும். ஏனென்றால் மற்ற நாடுகளில் இருந்து பலரும் இங்கு வந்துள்ளனர். பலுசிஸ்தானில் இருந்து வந்தவர்கள் இருக்கிறார்கள், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்கள் இருக்கிறார்கள், பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் இங்கே வேலை செய்கிறார்கள்.”

சல்மான் கானின் பேச்சில் பலுசிஸ்தான் இடம்பெற்றதுதான் சர்ச்சைக்குக் காரணம். பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் சிந்து ஆகியவை இதன் எல்லைகளாகும். 1947 முதல் இந்த மாகாணம் தன்னாட்சி மற்றும் சுதந்திரம் கோரி வருகிறது, 1971-ல் பங்களாதேஷ் உருவான பிறகு இது மேலும் வலுப்பெற்றது. இங்கு மனித உரிமை மீறல்கள், வளச் சுரண்டல் மற்றும் அரசியல் ஓரங்கட்டல் ஆகியவை உள்ளன. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கணக்கின்படி, 2011 முதல் பாகிஸ்தானில் சுமார் 10,000 பலூச் மக்கள் காணாமல் போயுள்ளனர்.