பயங்கரவாதி பட்டியலில் சல்மான் கான்! பாகிஸ்தானை வெறுப்பேத்தியது தான் காரணமா?
சவுதி அரேபியாவில் நடந்த மாநாட்டில் நடிகர் சல்மான் கான், பலுசிஸ்தானை பாகிஸ்தானிலிருந்து தனித்துப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அரசு அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்ததாக தகவல் பரவி வருகிறது.

சல்மான் கான் பயங்கரவாதி?
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான், அண்மையில் சவுதி அரேபியாவில் நடந்த 'ரியாத் ஃபோரம்' மாநாட்டில் பலுசிஸ்தான் குறித்துப் பேசிய கருத்துகள் காரணமாக, பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். இதன் விளைவாக, பாகிஸ்தான் அரசு அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சல்மான் கான் பேசியது என்ன?
சமீபத்தில் ரியாத்தில் நடந்த 'ஜாய் ஃபோரம் 2025' நிகழ்ச்சியில், ஷாருக்கான் மற்றும் அமீர்கானுடன் சல்மான் கான் பங்கேற்றார். அப்போது மத்திய கிழக்குப் பகுதிகளில் இந்திய சினிமாவின் செல்வாக்கு குறித்துப் பேசும்போது, அவர் குறிப்பிட்ட வார்த்தைகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
"நீங்கள் ஒரு இந்தித் திரைப்படம் எடுத்து இங்கு (சவுதி அரேபியா) வெளியிட்டால், அது ஒரு சூப்பர் ஹிட் ஆகும். தமிழ், தெலுங்கு அல்லது மலையாளத் திரைப்படத்தை உருவாக்கினால், அது பல நூறு கோடிகளைச் சம்பாதிக்கும். ஏனென்றால், பல நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளனர். இங்கு பலுசிஸ்தானைச் சேர்ந்த மக்கள் உள்ளனர், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மக்கள் உள்ளனர், பாகிஸ்தானைச் சேர்ந்த மக்கள் உள்ளனர், அனைவரும் இங்கு வேலை செய்கிறார்கள்," என்று சல்மான் கான் பேசியிருந்தார்.
சர்ச்சைக்கு என்ன காரணம்?
பலுசிஸ்தானைச் சேர்ந்த மக்களை, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாகக் கருதாமல் தனித்தனியே சல்மான் கான் குறிப்பிட்டது, சமூக ஊடகங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பலுசிஸ்தானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. இந்நிலையில், சல்மான் கான் அதை ஒரு தனி நாடு போலக் குறிப்பிட்டது பிரிவினைவாதத்தை ஆதரிப்பது போல உள்ளது என்று பலரும் விமர்சித்துள்ளனர்.
பத்திரிகையாளர் ஸ்மிதா பிரகாஷ் எக்ஸ் தளத்தில், "இது ஆச்சரியமாக இருக்கிறது! சல்மான் கான் பலுசிஸ்தானைச் சேர்ந்த மக்களை, பாகிஸ்தானில் இருந்து தனியாகப் பிரிந்துப் பார்க்கிறார்," என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர், "சல்மான் கானின் வாய் தவறிப் பேசிவிட்டாரா அல்லது பலுசிஸ்தான் சுதந்திரம் அடைந்துவிட்டது என்று கூறும் உள்நோக்கம் இருக்கிறதா? அதுவும் அமீர்கான், ஷாருக்கான் அருகில் இருக்கையில் ஏன் இப்படிப் பேச வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டாரா?
சல்மான் கானின் இந்தக் கருத்துகளை அடுத்து, பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (1997)-இன் கீழ் உள்ள 'நான்காவது அட்டவணையில்' (Fourth Schedule) பலுசிஸ்தான் அரசு அவரைச் சேர்த்துள்ளதாக ஆன்லைனில் பல செய்திகள் பரவி வருகின்றன.
இந்த அட்டவணை, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதில் சேர்க்கப்பட்டால், கடும் கண்காணிப்பு, கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட நடவடிக்கை ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும்.
சல்மான் கான் இந்த பட்டியலில் 'ஆசாத் பலுசிஸ்தான் உதவியாளர்' (Azad Balochistan Facilitator) என்ற காரணத்திற்காக சேர்க்கப்பட்டதாக, அக்டோபர் 16, 2025 தேதியிட்ட ஒரு அறிவிப்பு சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது.
உண்மை என்ன?
எனினும், இந்த அறிவிப்பின் உண்மைத்தன்மை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. நம்பகமான எந்தவொரு பாகிஸ்தானிய செய்தி நிறுவனமும் இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிடவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை.
சல்மான் கானின் இந்தக் கருத்து, பலுசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், நடிகர் சல்மான் கான் தரப்பிலிருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.