நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்!
Ajith Kumar gets Padma Bhushan Award: 2025 குடியரசு தினத்தை முன்னிட்டு நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து தவில் கலைஞர் தட்சிணாமூர்த்தி, பறை இசை கலைஞர் வேலு ஆசான் ஆகியோருக்கு பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து தவில் கலைஞர் தட்சிணாமூர்த்தி, பறை இசை கலைஞர் வேலு ஆசான் உள்பட 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. நாட்டின் பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த சாதனைகள் புரிந்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ என மூன்று வகைகளாக இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு, கலை, அறிவியல், மருத்துவம், விளையாட்டு, வர்த்தகம் மற்றும் பல துறைகளில் ஆற்றிய பங்களிப்பதற்காக 139 நபர்கள் பத்ம விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தவில் கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஶ்ரீ விருது! 50 ஆண்டு இசைத் தொண்டுக்கு மரியாதை!
அஜித்குமார் யார்?
ரசிகர்கள் பட்டாளத்தால் "தல" என்று அழைக்கப்படும் அஜித் குமார், தமிழ் சினிமாவின் தனக்கென தனி அடையாளத்தைப் பெற்றவர். அஜித் தனது பன்முகத்தன்மை, அர்ப்பணிப்பு மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
1990ஆம் ஆண்டு 'என் வீடு என் கணவர்' திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் அஜித். பின் 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் தனது நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆசை (1995) என்ற படம் அவருக்கு பெரிய திருப்புமுனையாகச் அமைந்தது.
மாறுபட்ட நடிப்பு:
இந்த வெற்றியைத் தொடர்ந்து, காதல் கோட்டை (1996), காதல் மன்னன் (1998), அவள் வருவாலா (1998) போன்ற மறக்கமுடியாத படங்களின் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார் அஜித். அமர்க்களம் (1999) மூலம் அதிரடி வேடங்களிலும் நடித்து அசத்தினார்.
சவாலான பாத்திரங்களை ஏற்று நடிக்கும் அஜித்தின் திறமை அவருக்கு திரையுலகில் மதிப்பைப் பெற்றுத்தந்தது. வாலி (1999),, சிட்டிசன் (2001), வில்லன் (2002), வரலாறு (2006) போன்ற படங்களில் மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து வியக்க வைத்தார். கிரீடம் (2007), பில்லா (2007), மங்காத்தா (2011) போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனைகள் படைத்தன.
ரேசிங் ஆர்வம்:
அஜித்தின் திறமைகள் வெள்ளித்திரையில் மட்டும் நின்றுவிடவில்லை. எம்.ஆர்.எப். ரேசிங் தொடரில் (2010) பங்கேற்று, மும்பை, சென்னை மற்றும் டெல்லி உட்பட இந்தியா முழுவதும் உள்ள சுற்றுகளில் போட்டியிட்டார். சர்வதேச ரேஸ்களிலும் கலந்துகொண்டு அசத்தியுள்ளார். ஃபார்முலா சாம்பியன்ஷிப்பிலும் போட்டியிட்டிருக்கிறார்.
30 ஆண்டுகளுக்கு மேலாக திரை வாழ்க்கையில் இருக்கும் அஜித் மூன்று பிலிம்பேர் விருதுகள், மூன்று தமிழ்நாடு அரசு விருதுகள் மற்றும் நான்கு விஜய் விருதுகள் என பல விருதுகளைப் வென்றுள்ளார்.
மத்திய பட்ஜெட் 2025: வருமான வரி அடுக்கு மாறுதா? வரிச் சலுகை யாருக்கு?