சினிமா துறை என்பது ஒரு கானல் நீர்... என்பதை மறந்து, கடலாய் அதனை பாவித்து அதில் நீந்தி கரையை கடக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், வரும் லட்சக்கணக்கானோரை கோடம்பாக்கம் பார்த்துள்ளது.

இவர்களில்... விடாப்பிடியாக இருந்து வெற்றி கொடியை நாட்டியவரும் உண்டு... வந்த தடம் தெரியாமல் அழிந்துவரும் உண்டு. இதற்கு  உதாரணமாக பெரிய பிரபலங்கள் கூட, ஒருநிலையில் கானல் நீராய் திரையுலகை விட்டு மறைந்து போய் உள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை.

நடிகர், நடிகையாகும் எண்ணத்தில் ஒரு சிலர் சென்னைக்கு வருகிறார்கள் என்றால், இயக்குனராகும் எண்ணத்திலும்... முன்னணி இயக்குனரிடம் துணை இயக்குனராக வேலை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்திலும் வருபவர்கள் பலர்... இப்படி இயக்குனர் எண்ணத்தோடு வரும் அனைவரும் வெற்றிபெறுகிறார்களா என்றால் அதுவும் சந்தேகமே.

அதே போல் ஒரு சில படங்களில் துணை இயக்குனராக வேலை செய்து விட்டு, திரைப்படம் இயக்கும் எண்ணத்தில் உள்ள சில துணை இயக்குனர்கள், திறமை இருந்தும் தங்களை நிரூபிக்க முடியாமல் போக, மன அழுத்தத்திற்கு ஆளாகி, மன ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அப்படி பட்ட ஒரு துணை இயக்குனரை பற்றி, பிரியன் மரியா என்கிற துணை இயக்குனர் ஒருவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள தகவல்கள் படிப்பவர்கள் நெஞ்சங்களையே உருக வைத்துள்ளது.

அவர் பதிவிட்டுள்ள பதிவில்... "சென்னை வடபழனி நூறடி சாலை, அம்பிகா எம்பையர் ஹோட்டல் எதிரில் தோழர் இளையராஜா என்பவரின் தேநீர் கடை அருகில், நிறைய முடியுடனும், அழுக்கு சட்டையுடனும் ஒரு நபர் எப்போதும் எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார்.

எழுதும் பேப்பரும், நோட்டும் மட்டும் வெள்ளை வெளேரென இருந்திருக்கிறது.

யாராவது அந்த நபரிடம் பேசினால், எதற்கும் பதிலளிக்காமலும், எழுதுவது என்னவென்றால், அதைக் காட்டாமல் மறைப்பதுமாக நாட்கள் ஓடியிருகின்றன.

எழுதுவதையும், கனத்த அமைதியையும் மட்டுமே தனக்கு நெருக்கமாக வைத்திருந்திருக்கிறார். தனது இந்த நிலையிலும் தன்னுடன் ஒரு நாயை வளர்க்கிறார்.

கொஞ்சநாட்களுக்குப் பிறகு அவர் மெல்ல மெல்ல பேச ஆரம்பித்திருக்கிறார்.

தனது பெயர் சுதாகர், சொந்த ஊர் திருச்சி, துறையூர், என்றும், 2001 ல் வெளியான “ பார்வை ஒன்றே போதும் ” என்ற திரைப்படத்தில் உதவிஇயக்குநராகப் பணிபுரிந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

உதவி இயக்குநர்களின் வாழ்க்கை என்பது ஆபத்துக்குரிய ஒன்றுதான்.

சுதாகரின் மனநிலையும், அவர் அந்த நோட்டில் என்னவெல்லாம் எழுதியிருப்பார் என்று சிந்தித்தால், சக உதவி இயக்குநரான என்னையும் பதட்டம் தொற்றிக்கொள்கிறது.

சுதாகரின் நிலையை எங்களால் உணர முடிகிறது. எதுவாகினும் சினிமாவைக் கடந்து மிகப்பெரிய வாழ்க்கை என்று ஒன்றிருக்கிறது.

சுதாகரின் இந்த நிலைமை என்பது மீண்டு வரக்கூடிய ஒன்றுதான் என்று நம்புகிறோம்.

இங்கிருக்கும் யாரையும் அவர் நம்பத் தயாராக இல்லை. ஒருவேளை தனது குடும்பத்தாரைக் கண்டால் மனம் மாறக்கூடும் என்று நம்பி இந்த தகவலினை உங்களோடு பகிர்கிறோம்.

மேலே இருக்கும் விபரங்கள் தவிர வேறெதுவும் அவர் தர மறுக்கிறார்.

இச்செய்தியை படிக்கும் தோழமைகள் தங்களால் இயன்ற தொடர்புகளை உருவாக்கித் தாருங்கள். அது சுதாகரை மிகவிரைவாக மீட்கவும் செய்யலாம்.

ஆயுதங்களுக்காகவும், ஆதாயங்களுக்காகவும் இயங்கிடும் மாய உலகில், சக மனிதர்களின் அன்புத்தேவைகள் அதிகரித்துக்கொண்டே போகிறது என்பது சமகால நிதர்சனம்.

நவீனங்களின் உற்பத்திகளில் வாழ்கையை இயந்திரத்தனமாய் உருமாறி உருக்குலைந்து கிடக்கிறோம்.

வாஞ்சையான அன்புகளும், அரவணைப்புகளும் நம்மைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டன.

அதற்கு ஈடாய், அதைவிட பன்மடங்கு வன்மங்களும், வக்கிரங்களும் நம்மை சூழ்ந்துவிட்டன.

ஆட்டோவில், டாக்சிக்களில், மனிதர்கள் கூடுமிடங்களில், அலுவலகங்களில், என்று எங்குமே யாரும் யாருடனும் பேசிக்கொள்வது கூட இல்லை.

நம்மிடம் இருக்கும் அன்பு, பாசம், நேசம், அக்கறை கொள்தல் என எல்லாவற்றையும் தராமல் மறைக்கிறோம், அல்லது மறுக்கிறோம்.

சக மனிதர்களிடம் உரையாடினாலே சுதாகர்கள் உற்பத்தியாக மாட்டார்கள். இருட்டை உருவாக்குபவர்கள் யாராகினும், வெளிச்சம் பாய்ச்சுபவர்கள் நாமாக இருப்போம்.

சுதாகரை அவர் குடும்பத்தோடு சேர்த்துவிட விரும்பும் தேநீர்கடை தோழர் இளையராஜாவை தொடர்புகொள்ள – 9790812895 . இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

அவரின் பதிவு இதோ...