சில பல மாதங்களுக்கு சுதந்திரப்போராட்ட தியாகி பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றைப் படம்பிடித்தே தீருவேன் என்று அடம்பிடித்த பா.ரஞ்சித் போலவே இயக்குநர் கோபி நயினாரும் அப்படத் திட்டத்தை கைவிட்டு விட்டு தற்போது சமந்தாவை வைத்து ஒரு படம் இயக்க முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்திருந்த படம் அறம். விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது.  கவுன்சிலர் தோண்டிய ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க போராடும் துணிச்சலான கலெக்டராக இந்த படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். கவுன்சிலரை கைது செய்து சிறையில் தள்ளியதால் அரசியல்வாதிகள் கோபத்துக்கு ஆளாவதும் இதனால் பதவியை துறந்து மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் ஈடுபட தயாராவது போன்றும் படத்தை எடுத்து இருந்தனர். இந்த படத்துக்காக நயன்தாராவுக்கு விருதுகளும் கிடைத்தன. 

இதையடுத்து கோபி நயினார் அறம் படத்தின் 2-ம் பாகம் இயக்க உள்ளதாக செய்திகள் பரவி வந்த நிலையில், அவர் சமந்தாவை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் பா.ரஞ்சித்தும் பிர்சா முண்டா படத்தை கைவிட்டுவிட்டு மூன்று ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றைக் கையில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது.