ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்யக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துள்ளது. இதனால், எந்த நேரத்திலும் பா.ரஞ்சித் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. 

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முன்ஜாமீன் கேட்டு பா.ரஞ்சித் தாக்கல் செய்த மனுவை வரும் வெள்ளிக்கிழமைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது. பா.ரஞ்சித்தை 21-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூரில் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய அவர், ‘ராஜராஜ சோழன் காலத்தில் தான் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நிலங்கள் பறிக்கப்பட்டன. ராஜராஜ சோழனின் காலம்தான் இருண்ட காலம்’ என்று பேசினார். அவருடைய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், ராஜராஜ சோழன் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, பா.ரஞ்சித் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, இயக்குநர் பா. ரஞ்சித் முன் ஜாமின் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் நான் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. எனது பேச்சு எந்தத் தரப்பு மக்களிடையேயும் பிளவை ஏற்படுத்தும் வகையில் அமையவில்லை. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். 

இந்த முன் ஜாமீன் மீதான விசாரணை நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே 2 முறை கைது செய்யக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை மேலும் நீட்டிக்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித்துக்காக வழக்கறிஞர் ரஜினி தரப்பு அவகாசம் கோரியதை அடுத்து முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஜூன் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.