’தமிழ்சினிமாவில் பெண்ணின் உடல் என்பது சினிமாவில் போகப்பொருளாகவும் சந்தையாகவும்தான் பார்க்கப்படுகிறது. நல்ல நடிகையைத் தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும், நல்ல உடலமைப்பு, அழகு, வடிவம் இவற்றுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது’ என்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.

சென்னையில் நடைபெற்ற மகளிர் தின விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பா.இரஞ்சித் கலந்துகொண்டார். அந்த விழாவில் அவர் பேசியதாவது: சினிமாவில் பெண் கதாபாத்திரங்கள் எப்படிப் படைக்கப்படுகின்றன என்று என்றைக்காவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? பெண்ணின் உடல் என்பது சினிமாவில் போகப்பொருளாகவும் சந்தையாகவும்தான் பார்க்கப்படுகிறது. நல்ல நடிகையைத் தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும், நல்ல உடலமைப்பு, அழகு, வடிவம் இவற்றுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

துணை நடிகைகளைப் பார்த்தோமானால், நன்றாக நடிக்கக் கூடியவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், ஹீரோயினைப் பொறுத்தவரை உடல்வாகு, நிறம் ஆகியவற்றை வைத்துத்தான் தேர்ந்தெடுக்கக்கூடிய சூழல் இருக்கிறது. மிகப்பெரிய வெற்றியடைந்த படங்களில் கூட ஆணின் அதிகாரத்தையும் ஹீரோயிசத்தையும் சப்போர்ட் செய்கிற, ஆணுக்கு அடங்கிப் போகிற ஹீரோயினாகத்தான் இருக்கும் நிறைய படங்களைத்தான் நாம் பார்த்து ரசிக்கிறோம்’ என்கிறார் பா.ரஞ்சித்.

‘காலா’ படத்தைத் தொடர்ந்து, ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக வீரச் சமர் புரிந்த பழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படத்தை இயக்குவதற்கான வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார் பா.இரஞ்சித். மேலும், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘அம்பேத்கர் இன்றும் நாளையும்’என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றையும், ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' என்ற படத்தையும் தயாரித்து வருகிறார்.