ஆஸ்கர் விருது வென்ற கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்
நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.
பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகியவை இந்தியாவின் உயரிய விருதுகளாக கருதப்படுகின்றன. ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் இந்த விருதுகள் இந்த ஆண்டும் ஏராளமான பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 91 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன.
டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் கலந்துகொண்டனர். குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தான் பத்ம விருதுகளை வழங்கினார். அந்த வகையில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... ஒரே வாரத்தில் ரூ.100 கோடி கலெக்ஷன்... பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் நானியின் ‘தசரா’
குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கையால் அவர் இவ்விருதை பெற்றுக்கொண்டார். ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் மட்டுமின்றி கோல்டன் குளோப் விருதையும் வென்றிருந்தது. ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியப் பாடல் என்கிற பெருமையையும் நாட்டு நாட்டு பாடல் பெற்று இருந்தது. தொடர்ந்து பல்வேறு விருதுகளை வென்று குவித்து வரும் இசையமைப்பாளர் கீரவாணிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. இசையமைப்பாளர் கீரவாணி பத்மஸ்ரீ விருதைப் பெறும்போது அவரது குடும்பத்தினரும் அங்கிருந்து அவருக்கு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. ஆனால் அவர் மறைந்துவிட்டதன் காரணமாக அவருக்கு பதிலாக அவரது குடும்பத்தினர் அவ்விருதை பெற்றுக்கொண்டனர்.
இதையும் படியுங்கள்... சூர்யா 42 படத்தின் டைட்டில் லீக் ஆனது.. ‘வி’ சென்டிமெண்டை கைவிட்டு கடவுள் பெயரை படத்திற்கு தலைப்பாக வைத்த சிவா