எம்.ஜி.ஆர் - சிவாஜிக்கு டஃப் கொடுத்த ஜெய் சங்கர்... இரவையும்- பகலையும் ஒன்றாக பார்த்த ஜேம்ஸ்பாண்ட்..!
எம்.ஜி.ஆர் - சிவாஜி என்று இரண்டு சிம்மங்கள், புகழின் உச்சியில் இருந்த போது, ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் ஆயினர்.
திரைப்பாடல் - அழகும் ஆழமும் -7. இரண்டும் ஒன்றுதான்! இரு மேதைகளின் சங்கமம்!
தமிழ்த் திரையுலகம் தொடர்ந்து புதுமுகங்களை அளித்து, தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது. எம்.ஜி.ஆர் - சிவாஜி என்று இரண்டு சிம்மங்கள், புகழின் உச்சியில் இருந்த போது, ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் ஆயினர். இருவருமே பல வெற்றிப் படங்களைத் தந்தனர்; தமிழ்த் திரை, இளமை குன்றாமல் பார்த்துக் கொண்டனர். ஜெய்சங்கர் - ரவிச்சந்திரன்.
1965இல் வெளியான 'இரவும் பகலும்' படத்தில் அறிமுகமான ஜெய்சங்கர், (கதாநாயகி - சி.வசந்தா!) நாளடைவில் துப்பறியும் படங்களில் நடித்து, தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஆனார். தனது முதல் படத்திலேயே உணர்ச்சி பூர்வமான 'சோலோ' பாடலுக்கு நடக்க (நடிக்க) வேண்டி வந்தது.
செயற்கையோ மிகையோ இன்றி இயல்பாக அவர் வெளிப்படுத்திய மெல்லிய சோகம், அன்றைய நாளில், தமிழ் ரசிகர்களுக்குப் புதிது. விரக்தியின் உச்சியில் விஷம் தேடிச் செல்பவன் அல்லன் அவன்; இதுவும் இயல்பானதுதான் என்கிற விவரம் அறிந்தவன்.
ஒளியும் இருளும் சேர்ந்ததுதான் வாழ்க்கை; வெற்றியும் தோல்வியும் கலந்ததுதான் விளையாட்டு. இதனை 'அனுபவ பூர்வமாக' உணர்ந்து கொள்கிறான் அவன். இந்த யதார்த்தம், பாடலாக வெளிப்படுகிறது. சென்ற தலைமுறை மறந்து போன இரு மேதைகளின் கூட்டணியில்,
பிறந்தது - மறக்க முடியாத அற்புதமான பாடல்.
பாடல் ஆசிரியர்: கவிஞர் ஆலங்குடி சோமு. இசை: டி.ஆர்.பாப்பா.
ஆலங்குடி சோமு இயற்றிய பாடல்களில், 'ஆண்டவன் உலகத்தில் முதலாளி...', 'ஆடலுடன் பாடலைக் கேட்டு..' 'பொன் மகள் வந்தாள்.. பொருள் கோடி தந்தாள்..' ஆகியன பெரும் புகழ் பெற்றன. டி.ஆர். பாப்பா - திருத்துறைபூண்டி ராதாகிருஷ்ணன் பாப்பா - ஒரு வயலின் மேதை.
சென்னை வானொலியில் நிலைய வித்வானாக இருந்தவர்; பல பக்திப் பாடல்களுக்கு இசை அமைத்தவர். குறிப்பாக சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள்.
'சின்னஞ்சிறு பெண் போலே..', அபிராமி ஆந்தாதி ஆகியன. திரையிசை அமைத்த சில பாடல்கள்: 'முத்தைத் தரு பத்தி..' (அருணகிரிநாதர்) 'சூடிக் கொடுத்தவள் நான் தோழி..' (டீச்சரம்மா) 'இறைவன் என்றொரு கவிஞன்..' (ஏன்?) 'வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்..' (அவசரக்கல்யாணம்)
இரவும் பகலும் படத்திலேயே கூட, 'உள்ளத்தின் கதவுகள் கண்களடா..' பாடல், மிகப் பிரபலம்.
இனிவரும் நாட்களில் இவை இடம் பெறலாம். வாய்ப்பு கிடைத்தால், இவ்விருவரின் படைப்புகளைத் தேடிப் பிடித்து, கேட்டுப் பாருங்கள்.
மெய் சிலிர்க்க வைக்கும். இது உறுதி.
எளிய தமிழ்; தெளிவான உச்சரிப்பு.
அதிலும், ஜெய்சங்கரின் நடிப்புக்கு, டி.எம் சௌந்தரராஜன் குரல் அற்புதமாகப் பொருந்தி வருகிற அழகைப் பாருங்கள்; ரசியுங்கள்.
இதோ அந்தப் பாடல்:
இரவும் வரும் பகலும் வரும்
உலகம் ஒன்று தான்
உறவும் வரும் பகையும் வரும்
இதயம் ஒன்று தான்
இதயம் ஒன்று தான்
பெருமை வரும் சிறுமை வரும்
பிறவி ஒன்று தான்
பிறவி ஒன்று தான்
வறுமை வரும் செழுமை வரும்
வாழ்க்கை ஒன்றுதான்
வாழ்க்கை ஒன்றுதான்
இளமை வரும் முதுமை வரும்
உடலும் ஒன்று தான்
உடலும் ஒன்று தான்
தனிமை வரும் துணையும் வரும்
பயணம் ஒன்றுதான்
பயணம் ஒன்றுதான்
விழியிரண்டு இருந்த போதும்
பார்வை ஒன்றுதான்
பார்வை ஒன்றுதான்
வழிபடவும் வரம் தரவும்
தெய்வம் ஒன்றுதான்
தெய்வம் ஒன்றுதான்
இரவும் வரும் பகலும் வரும்
உலகம் ஒன்று தான்
உலகம் ஒன்று தான்.
(வளரும்.
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
இதையும் படியுங்கள்:-
அத்தியாயம்:5: கட்டாயத் திருமணத்தை முறியடிக்க பகீர் திட்டம்... வீட்டிற்குள் நுழைந்த வளையல்காரன்..!
அத்தியாயம்:4: வீட்டை விட்டு வெளிய வந்தா நாலும் நடக்கலாம்... அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா..?