கே.ஆர். விஜயாவிடம் அடங்கி போன முத்துராமன்... மன்னனை மயக்கிய மல்லிகை..!
ஒரு காலத்தில், தமிழ்த் திரையில் குடும்ப 'சென்டிமென்ட்' நிச்சய வெற்றிக்கான கதைக் களமாக இருந்தது. அதிலும் பெண்கள் மத்தியில் அமோகமான ஆதரவு இருந்தது.
ஒரு காலத்தில், தமிழ்த் திரையில் குடும்ப 'சென்டிமென்ட்' நிச்சய வெற்றிக்கான கதைக் களமாக இருந்தது. அதிலும் பெண்கள் மத்தியில் அமோகமான ஆதரவு இருந்தது.
பல ஊர்களில் திரையரங்க வாசலில், 'பெண்கள் மட்டும்' என்கிற பலகை காணப் பட்டால், அந்தப் படம் மிகப் பெரிய வெற்றி என்று பொருள். ஆச்சரியமான உண்மை - 'மதராஸ்' முதல் சின்னஞ்சிறு ஊர்களில் இருந்த 'டெண்ட் கொட்டாய்' வரையிலும், இந்தப் படங்களுக்குப் பெண்கள் கூட்டம் ஒரே மாதிரி இருந்தது.
இந்தப் பட்டியலில் முக்கிய இடம் பிடித்தது - 1974இல் வெளியான - 'தீர்க்க சுமங்கலி'. கே.ஆர். விஜயா - தனது வசீகரப் புன்னைகையில் பெண்களின் ஆதரவை அள்ளிக் கொண்டு போனார். இது போன்ற படங்களில் கதாநாயகிகள் முக்கிய பங்கு வகிப்பார்கள். அவர்கள் முன், கதைக்கு ஏற்றபடி, 'அடக்கி வாசிப்பதற்கு என்றே சில கதாநாயகர்கள் இருந்தார்கள். இவர்களில் முதன்மையானவர் - முத்துராமன்.
இதேபோன்று இவ்வகைப் படங்களை இயக்குவதற்கும் சில 'பிரத்யேக' நபர்கள் இருந்தனர். கே.எஸ்.கோபாலகிருஷ்னன், இதில் தனி முத்திரை பதித்தார். அடுத்ததாக - ஏ.சி.திருலோகசந்தர். இவரது இயக்கத்தில் கே.ஆர். விஜயா - முத்துராமன் நடித்த படம் 'தீர்க்க சுமங்கலி'. கதை - ஜி.பாலசுப்ரமணியம்; வசனம் - காரைக்குடி நாராயணன்.
படத்தில் வாலி எழுதிய ஒரு பாடல், வாணி ஜெயராம் குரலில் அபார வெற்றி கண்டது. தமிழ்த் திரை தந்த தரமான மெல்லிசைப் பாடல்களில் இதற்குத் தனி இடம் உண்டு.இளம் கணவன் - மனைவி இடையே எழும் சிருங்கார உறவுக்கு இப்பாடல், ஓர் இனிய அச்சாரம். இசைம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்த அப்பாடலின் வரிகள்:
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலர் அல்லவோ
என்னேரமும் உன் ஆசை போல்
பெண்பாவை நான் பூ.. சூடிக்கொள்ளவோ
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள் மேனியைத் தொட்டுத் தாலாட்டுது.
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி
கொஞ்சிப் பேசியே அன்பைப் பாராட்டுது.
என் கண்ணன் கொஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம்தான்
கையோடு நான் அல்லவோ
என் தேவனே உன்தேவி நான்
இவ்வேளையில் உன்தேவை என்னவோ
பொன் மாங்கல்யம் வண்ணப் பூச்சரம்
மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது
ஓராயிரம் இன்பக் காவியம் உந்தன்
கண்களில் அள்ளி நான் தந்தது,
நம் இல்லம் சொர்க்கம்தான்
நம் உள்ளம் வெள்ளம்தான்
ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும்
உன்னோடுதான் நான் தேடிக் கொண்டது.
(வளரும்.
-பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.