திரைப்பாடல்- அழகும் ஆழமும்-28: சிந்தையும் சீய்லௌம் ஒன்று பட்டாலே... 

தமிழ்த் திரையுலகில் பக்திப் படங்கள் ஓய்ந்து, சமூக, அரசியல் படங்கள் தலை தூக்கிய காலத்தில், குடும்பப் பாங்கான கதையில் மனித உறவுகளை மையப் படுத்தி தரமான படங்களைத் தந்தவர் இயக்குனர் பீம்சிங். 'ப' வரிசைப் படங்கள் என்று அழைக்கப் பட்ட இப்படங்களில் இயக்குனர் - பீம்சிங்; கதாநாயகன் - சிவாஜி கணேசன்; பாடல்கள் - கண்ணதாசன்; இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி.

 

(இதே போன்று எம்.ஜி.ஆர். - தேவர் கூட்டணியில் வெளியான 'தாய்' வரிசைப் படங்களும் இருந்தன.) தமிழ்த் திரையின் பொற்காலம் அது. இலக்கியத் தரத்தில் படல் வரிகள்; 
மனதுக்கு இதமான இசை அமைப்பு; தேனினும் இனிமையான குரல்; கல் மனதையும் கரைத்து விடும் அற்புதமான நடிப்பு. அப்படங்கள் உண்மையிலேயே காவியங்கள்தாம். 
அதிலும், குடும்பத்தோடு பார்க்கிற வகையில், சற்றும் விரசம் இல்லாமல், கலை நயத்தோடு கதை சொன்ன இயக்குனர் பீம்சிங், போற்றத் தகுந்தவர். 

உடலால் அவன் ஒரு மாற்றுத் திறனாளி. அவனது மனைவி அவனைத் தேற்றுகிறாள். குறையைக் குறித்துக் கவலைப்பட வேண்டாம். தங்கத்தின் தரத்தில் குறை உண்டா..? சிங்கத்தின் சீற்றத்தில் குறை உண்டா..? வான்மதியின் குளிர் ஒளியில், தென்றலின் காதல் பயணத்தில், எப்போதும் குறை இருப்பது இல்லை. காதல் உறவின் அன்பும் அப்படித்தான்.

 

என்னவொரு பாடல்..? என்னவொரு கருத்து...? வான் உயரத்துக்கு கண்ணதாசன் உயர்ந்து நிற்பதன் காரணமே.. எளிய சொற்களில் அவர் உணர்த்திய ஆழமான உணர்வுகள்தாம்.. ஏறத்தாழ இதே போன்று, ஒரு குறையுடன், ஒரு நாயகன் பாடுகிறான் - 'இந்திரன் தோட்டத்து முந்திரியே... மன்மத நாட்டுக்கு மந்திரியே...' இதயத்தில் இருந்து கொட்டுகிற கவிதை - 'சிந்தையும் செயலும் ஒன்று பட்டாலே மாற்றம் காண்பதுண்டோ..?' என வினவுகிறது. மூளையை மட்டும் வைத்து எழுதுகிற சினிமாப் பாட்டு - 
'முந்திரியே... மந்திரியே,' என்றுதான் வெளிவரும்!! 1959இல் வெளிவந்த பாடம் - பாகப்பிரிவினை. இதில், காலத்தை வென்று நிற்கும் கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு, 
விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில், உயிர் கொடுக்கிறார் - பாட்டரசி பி. சுசீலா. என்னவொரு இனிமை... என்னவொரு தெளிவு...!

இதோ அந்தப் பாடல்: 

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் 
தரத்தினில் குறைவதுண்டோ...? - உங்கள் 
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் 
அன்பு குறைவதுண்டோ..? 

சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் 
சீற்றம் குறைவதுண்டோ..?
சிந்தையும் செயலும் ஒன்று பட்டாலே 
மாற்றம் காண்பதுண்டோ...? 
மாற்றம் காண்பதுண்டோ...? (தங்கத்திலே..

கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் 
தவழ்ந்து வரவில்லையா...? 
இரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்தே 
காதல் தரவில்லையா..? 
காதல் தரவில்லையா...? (தங்கத்திலே...

காலம் பகைத்தாலும் கணவர் பணிசெய்து 
காதல் உறவாடுவேன்... 
உயர் மானம் பெரிதென்று வாழும் குலமாதர் 
வாழ்வின் சுவை கூறுவேன்....
வாழ்வின் சுவை கூறுவேன். 

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் 
தரத்தினில் குறைவதுண்டோ...? - உங்கள் 
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் 

அன்பு குறைவதுண்டோ..?

 

(வளரும். 
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

1.சங்கம் காணாதது தமிழும் அல்ல... தன்னை அறியாதவள் தாயும் அல்ல..!

2.பல கைகள் மாறிச் சென்ற பொம்மைக்குள் வைக்கப்பட்ட 'டைம்-பாம்...' சஸ்பென்ஸ் கலந்த பாப்பா..!

3. கற்புக்கு கண்ணகி... காதலுக்கு ஜானகி... தேவன் வந்து பாடுகின்றான்..!