இந்நிலையில் நடிகர் விஜய் தனக்கும் தனது தந்தை ஆரம்பித்துள்ள கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் நேரடிய விளக்கம் கொடுத்துள்ளார். 

நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக மாற்ற உள்ளதாகவும், அதற்காக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அத்துடன் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியின் பெயரை, டெல்லியில் உள்ள அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்துள்ளதாகவும் செய்திகள் தீயாய் பரவின. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால் விஜய் அப்படி கட்சி எதுவும் ஆரம்பிக்கவில்லை என்று அவருடைய செய்தி தொடர்பாளரான ரியாஸ் அகமது மூலமாக உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில் விஜய் பெயரில் நான் தான் கட்சி ஆரம்பித்தேன் என அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கமளித்தார். அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சிக்கான பதிவிற்காக தான் தான் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்ததாகவும், இதற்கும் விஜய்க்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் நடிகர் விஜய் தனக்கும் தனது தந்தை ஆரம்பித்துள்ள கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் நேரடிய விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் ஓர் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன் அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதன் மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன். மேலும் எனது ரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.