மறைந்த நடிகர் கிருஷ்ணமூர்த்தியின் உடல் தற்போது குமுளியில் இருந்து கோட்டயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.அங்கு போஸ்ட்மார்ட்டம் நடைபெறவுள்ளது. மதியத்திற்குள் அவருடைய உடல் படக் குழுவினரிடம் ஒப்படைக்கப்படுமாம். இன்று இரவு 1 மணிக்கு அவரது உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் கிருஷ்ணமூர்த்தி கடைசி வரை தன்னுடைய சம்பளம் இது என்று நிர்ணயித்துக்கொள்ளாமல் கொடுக்கிற தொகையை, அதுவும் பல சமயங்களில் சம்பளம் வாங்காமலேயே நடித்துக்கொடுத்ததாலோ என்னவோ முகநூல் முழுக்க அவருக்கு இரங்கல் பதிவுகள் நிரம்பி வழ்கின்றன. அப்பதிவுகளில் ஒன்று இது...

அட்ரஸை தேடிப்போன கிருஷ்ணமூர்த்தி...

‘‘ஹேய்... வடிவேலு காமெடியில வருவாருல்ல...’’ என கிருஷ்ண மூர்த்தியை டக்கென நம்மால் அடையாளம் காண முடியும். ‘‘எக்ஸ்க்யூஸ்மி... இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா?’’ என இவர் ஒசாமா பின்லேடன் அட்ரஸைக் கேட்பது ‘தவசி’ படத்தில் வந்த எவர்கிரீன் காமெடி! ‘தெனாலிராமன்’ படத்தில் தெலுங்கு அமைச்சர்...‘கருப்பசாமி குத்தகைதார’ரில் டீக்கடைக்காரர் எனத் தற்கால சினிமாவில் இவர் முகம் தவிர்க்க முடியாதது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்குப் போனால், ஹாலில் மெடல்களும் ஷீல்டுகளும் பரிசுக்கோப்பைகளும்! ‘‘நோ நோ... நான் வாங்கலைங்க... என் மூத்த மகன் கார் ரேஸர். அவர் வாங்கினது அதெல்லாம்..!’’ என வரவேற்கிறார்!

‘‘என்னை ஒரு காமெடி நடிகராகத்தான் உங்களுக்கெல்லாம் தெரியும். ஆனா, இண்டஸ்ட்ரியில நான் புரொடக்ஷன் மேனேஜர். பாலாவோட ‘நான் கடவுள்’ உள்பட டஜன் கணக்கில் படங்கள், ஆயிரத்திற்கும் மேலான விளம்பரப்படங்களுக்கு புரொடக்ஷன் வொர்க் பண்ணியிருக்கேன். சொந்த ஊர் திருவண்ணாமலை. 1983ல சினிமாவுக்கு வந்தேன். ‘குழந்தை ஏசு’ படத்துல ஆபீஸ் பாயா சேர்ந்தேன். அந்தப் படம் பாதி வளர்ந்துட்டு இருக்கும்போது கேஷியர் ஆனேன். முடியும்போது புரொடக்ஷன் மேனேஜர் ஆகிட்டேன்.

ஆனா, எனக்கு நடிக்கத்தான் ஆசை. நான் வேலை செய்யிற படங்கள்ல சின்னச் சின்ன ரோல்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். ‘ராசய்யா’ படத்துக்கு புரொடக்ஷன் மேனேஜர் நான். அதில் சில சீன்களை பிரபுதேவாவே டைரக்ட் பண்ண வேண்டியிருந்தது. ‘நான் நடிக்கிறேன் சார்’னு கேட்டேன். ‘மொட்டை போட்டுட்டு வந்தா நடிக்க வைக்கிறேன்’னு அவரும் விளையாட்டா சொன்னார். ஆனா, நான் சீரியஸாவே லஞ்ச் பிரேக்ல போய் மொட்டை போட்டுட்டு வந்துட்டேன். ‘உனக்குள்ள இவ்ளோ வெறியா?’னு ஆச்சரியமாகி, வடிவேலு கூட ஒரு சீன் நடிக்க வச்சார்.

அதுக்கப்புறம் ரொம்ப நாள் கழிச்சு, வடிவேலு என்னை ஞாபகம் வச்சி ‘தவசி’ படத்துல நடிக்கக் கூப்பிட்டார். வடிவேலு சாரை சந்திச்ச பிறகு என் கேரியரே மாறிடுச்சு. அவரோட மட்டும் 26 படங்கள் பண்ணியிருக்கேன்.வடிவேலு சார்கிட்ட கத்துக்க நிறைய இருக்கு. ஒரு படத்தோட கதையைக் கேட்ட உடனே எங்களை எல்லாம் கூப்பிடுவார். அப்போ ஆரம்பிக்கிற டிஸ்கஷன், படத்தோட ஷூட்டிங் தொடங்குறதுக்கு ரெண்டு நாள் முன்ன வரை போகும். ஸ்பாட்டுக்கு போனதும், மறுபடியும் ரிகர்சல் பண்ணி, டீமையே ஜூஸா பிழிய வச்சு, அப்புறம்தான் டேக் போவார்.

வடிவேலு சார் படங்கள்ல எங்களோட டயலாக், மாடுலேஷன், பாடி லாங்குவேஜ்னு அத்தனையும் அவர் சொல்லிக் குடுத்து நடிச்சதுதான். நாம சாதாரணமா போய் நின்னா போதும். மத்ததை அவர் பார்த்துப்பார். அதே மாதிரி ஆக்ஷன் அளவுகோல் தெரிஞ்ச இயக்குநர்கள்கிட்ட மாட்டினா, நம்மை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போயிடுவாங்க. பாலா சாரை இதுக்கு உதாரணமா சொல்லலாம்.ரஜினி சார் தவிர எல்லோர் கூடவும் நடிச்சிட்டேன். கமல் சார் கூட ‘அன்பே சிவம்’ல ஒரு சீன்... கம்யூனிஸ்ட் குரூப் கூட உட்கார்ந்திருப்பேன். இப்ப ஜனநாதன் சாரோட ‘புறம்போக்கு’ல நல்ல கேரக்டர் பண்றேன். ‘நான் கடவுள்’ல நான் பண்ணினது ரொம்ப வெயிட்டான கேரக்டர். கொடூரமான முதலாளிக்கும் பாவப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையில ‘முருகன்’னு ஒரு சூப்பர்வைஸர் கேரக்டர். அந்தப் படத்துக்காக மாற்றுத்திறனாளிகளோட ஒன்றரை வருஷம் பழகினோம்.

கடைசி நாள் ஷூட்டிங் முடிஞ்சு போனப்போ யூனிட்ல எல்லாருமே சேர்ந்து அழுதுட்டோம்.அன்பான, அளவான ஃபேமிலி என்னோடது. ஜனவரி வந்தா 25வது வருஷ திருமண நாள். என் மனைவி மகேஸ்வரி... எம்.ஜி.ஆர்கிட்ட ஃபைட்டரா இருந்தவரோட பொண்ணு. லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். 2 மகன்கள். பெரியவன் பிரஷாந்த் கார் ரேஸ் ட்ரெய்னரா இருக்கான், சின்னவன் ஸ்ரீஹரி, +2 படிக்கிறான். ஒரு புரொடக்ஷன் மேனேஜரா நிறைய பார்த்தாச்சு... சச்சின் உட்பட பெரிய கிரிக்கெட் ப்ளேயர்ஸ் கூடல்லாம் விளம்பரப் படங்கள்ல வொர்க் பண்ணியிருக்கேன். நிறைய அனுபவம் இருக்கு.

நடிப்பு எனக்கு ஆர்வம். அதனால அதுல காசு பணத்தையோ, கவுரவத்தையோ பார்க்குறதில்ல. யார் கேட்டாலும் - அது சும்மா தலை காட்டிட்டுப் போற சீனா இருந்தாலும் - நடிச்சுக் கொடுப்பேன். இப்ப புதுசா வர்ற குறும்பட இயக்குநர்கள் எல்லாருக்கும் என்னை நல்லா தெரியும். அவ்வளவு குறும்படங்கள் நடிச்சுக் கொடுத்திருக்கேன். ‘என்னடா, இன்னமும் சின்னச் சின்ன சீன்லயே நடிக்கக் கூப்பிடுறாங்களே’ன்னு என்னிக்கும் நான் வருத்தப்பட்டதில்லை.அப்படி ஒவ்வொரு சீன்ல வந்தே, பதினைஞ்சு வருஷமா ஃபீல்டுல நிக்கிறேனே... அதுவே பெரிய விஷயமாச்சே! சினிமாவுல எதையெல்லாம் பண்ணக் கூடாதுன்னு தெரிஞ்சுக்கிட்டா போதும்... நிலைச்சு நின்னுடலாம். இது என் சொந்த அனுபவம். மவுத் பப்ளிசிட்டிதான் உண்மையான பப்ளி சிட்டி!’’ - தனது அனுபவங்களை தூவிய கிருஷ்ணமூர்த்தி. இப்போது நம்மிடமிடையே இல்லை!
...முகநூலில் மை.பாரதிராஜா.