no objection to register a case against kamal

நிலவேம்பு கசாயம் குறித்து நடிகர் கமலஹாசன் தவறான கருத்துக்கள் கூறியிருப்பதற்கு முகாந்திரம் இருந்தால் அவர் மீது வழக்கு பதிவு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டெங்கு காய்ச்சல் வெகு வேகமாக பரவிவருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் தமிழக அரசு சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் அமைப்புகளும் நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்து வருகிறது.

இந்நிலையில் நிலவேம்பு குடிநீர் அருந்தினால் மலட்டுத் தன்மை உண்டாகும் என ஒரு தகவல் பரவியது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த கமலஹாசன், நிலவேம்பு குறித்த ஆராய்ச்சி முடிவுகள் வரும் வரை தனது நற்பணி மன்றத்தைச் சேர்ந்தவர்கள் இதனை சிவிரியோகம் செய்ய வேண்டாம் என தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழக அரசும், சித்த மருத்துவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கமல் தவறாக தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேவராஜன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் நிலவேம்பு குடிநீர் குறித்து கமலஹாசன் தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளார் என்றும் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ், முகாந்திரம் இருந்தால் கமலஹாசன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டார்.