நடிகர் மாரிமுத்துவின் பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து மாரிமுத்து மாரடைப்பால் இன்று மரணம் அடைந்த சம்பவம் திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவின் பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாய் வித் சித்ரா என்ற யூ டியூப் சேனலுகு பேட்டியளித்த அவர் “ சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த போது, மிகவும் கஷ்டப்பட்டேன். ஒருமுறை தீபாவளி பண்டிகை வந்தது. அப்போது என் அறையில் இருந்த அனைவரும் ஊருக்கு போய்விட்டனர். ஊருக்கு போக காசு இல்லாததால் இங்கேயே தங்கிவிட்டேன். எனக்கு பசித்ததால் வழக்கமாக அக்கவுண்ட் வைத்து சாப்பிடும் ஹோட்டலுக்கு சென்றேன். அந்த ஹோட்டல் பூட்டி இருந்தது.
வேறு ஹோட்டலுக்கு போகவும் காசு இல்லை.. சரி மற்ற நண்பர்களிடம் வாங்கிக் கொள்ளலாம் என்று சென்றால் அனைவரும் ஊருக்கு சென்றுவிட்டனர். பசி வயிற்றை கிள்ளியது. என்ன செய்வது என்று தெரியாமல், அறையில் சாப்பிட ஏதேனும் உணவு இருக்கிறதா என்று பார்த்தேன். எதுவும் இல்லை. ஊறுகாய் பாட்டில் மட்டும் இருந்தது. வேறு வழியில்லாமல் ஊறுகாயை நக்குவது பின்னர் தண்ணீர் குடிப்பது என 3 நாட்களை ஓட்டினேன். பின்னர் 4-வது நாள் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்தேன். அதற்கு ஊருக்கு சென்ற நண்பர்கள் வந்துவிட்டனர். அவர்கள் என்னை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குளூக்கோஸ் ஏற்றினார்கள்.. அதன் பின்னரே உடல் நிலை தேறியது” என்று குறிப்பிட்டார்.
இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்த பலரில் நடிகர் மாரிமுத்துவும் ஒருவர். தேனி மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து 1990-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார்.
ஆரம்ப நாட்களில் ஹோட்டலில் வெயிட்டராக பணிபுரிந்த அவர், கவிஞர் வைரமுத்துவின் அறிமுகம் கிடைத்தது. இலக்கியங்கள் மீது ஆர்வம் இருந்ததால் வைரமுத்து உடன் நெருக்கமானார் மாரிமுத்து. பின்னர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குனராக சேர்ந்த மாரிமுத்து, அரண்மனை கிளி, எல்லாமே என் ராசா போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.
மாரிமுத்து மறைவால் எதிர்நீச்சல் தொடருக்கு சிக்கல்... அடுத்த ஆதி குணசேகரன் யார்?
தொடர்ந்து மணிரத்னம், சீமான், வசந்த், எஸ்.ஜே. சூர்யா போன்ற இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக இருந்தார். வாலி படத்தில் முதன்முறையாக எஸ்.ஜே சூர்யா உடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் சிம்புவின் மன்மதன் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய அவர், 2008-ல் பிரசன்னாவை வைத்து கண்ணும் கண்ணும் படத்தை இயக்கினார். பின்னர் 2014-ல் புலிவால் என்ற படத்தையும் அவர் இயக்கினார். அவர் இயக்கிய படங்கள் பெரிதளவில் வெற்றி பெறாததால் நடிப்பில் கவனம் செலுத்தினார் மாரிமுத்து.
யுத்தம் செய், நிமிர்ந்து நில், ஜீவா, கொம்பன், கொடி, பைரவா, மகளிர் மட்டும், பரியேறும் பெருமாள், சண்டக்கோழி 2, மிஸ்டர் லோக்கல், பூமி. சுல்தான், டாக்டர், விக்ரம், ஜெயிலர் என பல படங்களில் நடித்துள்ளார். ஷங்கர் – கமல் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் மாரிமுத்து நடித்துள்ளார். பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், எதிர்நீச்சல் என்ற சீரியல் அவரை அதிக பிரபலமாக்கியது.மாரிமுத்து என்றால் யார் என்று தெரியாதவர்களுக்கு எதிர்நீச்சல் குணசேகரன் என்றால் நிச்சயம் தெரியும். இந்த ஒரே சீரியல் மூலம் அந்தளவுக்கு பிரபலமானார். மீம்ஸ், வீடியோக்கள், எதிர்நீச்சல் சீரியல் சீன்கள், வசனங்கள் என சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
