2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது அரசியலுக்கு வருவேன் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். உடனடியாக ரசிகர் மன்றங்களை எல்லாம் மக்கள் மன்றமாக மாற்றிய ரஜினி, அதற்கான நிர்வாகிகளையும் நியமித்தார். பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னரும் படங்கள் நடிக்க உள்ளதாகவும் அதற்கான இயக்குநர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ரஜினி ரசிகர்கள் கடுப்பாகியினர். நெட்டிசன்கள் ரஜினியின் அரசியல் வருகை குறித்து சோசியல் மீடியாவில் மீம்ஸ்களை உலவ விட்டனர். தலைவர் ஒருவேலை அரசியலுக்கு வரவே மாட்டாரோ என்று அவரது ரசிகர்களே சந்தேகத்தில் உள்ளனர், ஒரு சிலரோ சூப்பர் ஸ்டார் வரப்போகும் சட்டமன்ற தேர்தலுக்கு தயார் ஆகிவருகிறார். விரைவில் தனது கட்சி பெயரை அறிவிப்பார் என காத்திருக்கின்றனர். 

தற்போது தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நிலையில் ரஜினியின் அரசியல் வருகை குறித்து நக்கலடிக்கும் விதமாக பெட்டிக்கடைக்காரர் வைத்த அறிவிப்பு பலகை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

அதில் ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் கட்சி ஆரம்பிக்காமல் நாட்களை கடத்தி வருவதை அழகாக விமர்சித்துள்ளது அந்த அறிவிப்பு பலகை. சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் அந்த அறிவிப்பு பலகையின் போட்டோவை பார்க்கும் நெட்டிசன்கள் சிலர், இனி கடனே கிடையாது என்பதை எவ்வளவு அழகா சொல்லியிருக்காரு என கமெண்ட் அடித்து வருகின்றனர்.