இயக்குனர் ஹேமந்த் மதுக்கூர் இயக்கத்தில், நடிகை அனுஷ்கா, மாதவன், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'நிசப்தம்' திரைப்படம், ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஓடிடி பிளாட் ஃபாமில் ஒளிபரப்பாகும் என வெளியான தகவலுக்கு தற்போது, இந்த படத்தின் தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மெல்ல மெல்ல ஆரம்பமாகும் போதே... மக்கள் அதிகமாக கூடும் இடங்களான, திரையரங்கம், கோவில், மால் போன்ற இடங்களில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது.

ஏப்ரல் மாதமே ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்ட ஊரடங்கு ஜூன் 3 ஆம் தேதிவரை போடப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பிரச்சனை குறையவில்லை என்றால், மேலும் சில தினங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீடிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், ஏப்ரல் மாதத்தில் வெளியாக வேண்டிய பல படங்கள் இன்னும் வெளியாகாமல் உள்ளது.  அதே நேரத்தில் சில படங்களை ஓடிடி பிளாட் ஃபாம்மில் வெளியிடவும் சில தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் பேச்சுகள் அடிபட்டு வருகிறது.

அந்த வகையில் அனுஷ்கா நீண்ட இடைவெளிக்கு பின் நடித்துள்ள, நிசப்தம் படமும் ஓடிடி பிளாட் ஃபாமில் வெளியாக உள்ளதாக, வெளியான தகவலுக்கு அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.  

எனவே தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம், ஊரடங்கு உத்தரவு முடிந்து, திரையரங்கங்கள் திறக்கப்பட்ட பின்பே வெளியாகும் என தெரிகிறது.