சந்திரயானை கிண்டல் செய்த பிரகாஷ் ராஜ்... ரவுண்டு கட்டி வெளுத்துவாங்கிய நெட்டிசன்கள்!
இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 3 விண்கலம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்ட புகைப்படத்தால் நெட்டிசன்கள் அவரை சாடி வருகின்றனர்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி வில்லன் நடிகராக வலம் வருபவர் பிரகாஷ் ராஜ். அவர் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். குறிப்பாக மோடிக்கு எதிராக கருத்துக்களை கூறி சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரபரப்பை கிளப்பி வரும் பிரகாஷ் ராஜ், தற்போது சந்திரயான் 3 விண்கலத்தை ட்ரோல் செய்யும் வகையில் பதிவிட்டுள்ள புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 3 விண்கலம் அதன் வெற்றியை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. நிலவை நெருங்கி வரும் சந்திரயான் விண்கலம் ஆகஸ்ட் 23-ந் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் சந்திரயானின் பயணம் வெற்றியடைய பிரார்த்தனை செய்து வருகிறது.
இதையும் படியுங்கள்... சந்திரயான்-3 விண்கலத்தின் கிளைமாக்ஸ் எப்படி இருக்கும்? சவாலான கடைசி 15 நிமிடத்தில் நடக்கப்போவது என்ன?
இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பிரேக்கிங் நியூஸ் என பதிவிட்டு, வாவ்... நிலவில் இருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம் என குறிப்பிட்டு, ஒருவர் டீ ஆத்தும் படியான கார்ட்டூன் இமேஜை பதிவிட்டுள்ளார். அவர் பிரதமர் மோடியை கிண்டலடிக்கும் நோக்கில் இதை பதிவிட்டிருந்தாலும், அதை சந்திரயானோடு ஒப்பிட்டு பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் அதிருப்தி அடைந்த நெட்டிசன்கள் நடிகர் பிரகாஷ் ராஜை சரமாரியாக சாடி வருகின்றனர். சந்திரயான் என்பது இந்தியாவே பெருமை கொள்ளும் ஒரு திட்டம் அதை வைத்து இப்படி அரசியல் செய்கிறீர்களே என அவரை வெளுத்து வாங்கி வருகின்றனர். அவரின் இந்த டுவிட்டுக்கும் தொடர்ந்து நெகடிவ் கமெண்ட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... சந்திரனை நெருங்கிய சந்திரயான் 3.. நிலவின் புகைப்படங்களை அனுப்பிய LHDAC - முழு விவரம்!