அஜீத்தின் அடுத்த படமான ‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸாக சரியாக இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில் அப்படம் குறித்து சில மனம் திறந்த கருத்துகளை வெளிப்படையாகப் பேச ஆரம்பித்திருக்கும் இயக்குநர் வினோத், தனது காட்சிகள் திருப்தி தரும்வரை மீண்டும் மீண்டும் ’ஒன்மோர்’ கேட்டு தல நடித்த ருசிகர தகவலை வெளியிட்டுள்ளார்.

‘நே.கொ.பா’படப்பிடிப்பு துவங்கிய சமயத்தில் அஜீத்துக்கும் இயக்குநர் வினோத்துக்கும் ஒத்துவரவில்லை. அதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இரண்டாவது படத்தையெல்லாம் இணைந்து செய்யமாட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் கிளம்பின. ஆனால் அச்செய்திகளெல்லாம் பொய்த்துப்போகும் வகையில் நல்ல புரிதலுடன் படத்தை முடித்திருக்கும் வினோத் அஜீத்துடன் அடுத்த படத்திலிம் இணைந்து பணியாற்றத் தயாராகிவிட்டார்.

இந்நிலையில் ‘நேர்கொண்ட பார்வை’யில் தங்களுக்கிடையில் எவ்வளவு அபாரமான புரிதல் இருந்தது என்பது குறித்துப்பேசிய வினோத்,’அஜீத் சாரின் காட்சிகளைப் பொறுத்தவரையில் இப்படி நடிக்கவேண்டும். அப்படி நடிக்கவேண்டும் என்று ஒரு காட்சியைக் கூட நான் சொல்லித் தரவில்லை. அவர் விருப்பப்படியே நடித்தார். ஆனால் தனக்குத் திருப்தி இல்லை அல்லது சந்தேகம் என்று வந்துவிட்டால் கொஞ்சமும் தயக்கம் காட்டாமல் கேமராமேனிடம்  ‘ஒன்மோர்’கேட்டு அபாரமாக நடித்தார்’என்று பெரும் ரகசியத்தை சர்வசாதாரணமாக உடைக்கிறார் வினோத்.