‘இந்தப் படத்தை எப்பிடி முடிக்கிறேன்னு பாக்குறேன்’ என்று சவால்விட்டுவிட்டு படத்தின் நாயகி பாதியில் எஸ்கேப் ஆகிவிட முழுபடத்தையும் வேறொரு கதாநாயகியை முடித்துவிட்டு ரிலீஸுக்குத் தயாராகியிருக்கிறார் ’நெடுநல்வாடை’ படத்தின் அறிமுக இயக்குநர் செல்வக்கண்ணன்.

இயக்குநர்கள் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா, சாமி, ராஜேஷ்.எம்.செல்வா ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் செல்வக்கண்ணன். தாத்தா பேரன் செண்டிமெண்ட் கதை கொண்ட இப்படத்தில் ‘பூ’ ராமு தவிர மற்ற நட்சத்திரங்கள் அனைவரும் புதியவர்கள். துவக்கத்தில் இப்படத்தின் கதாநாயகியாக அதிதி என்பவரை கமிட் பண்ணியிருந்தார்.

துவக்கத்தில் ஒத்துழைப்பு அளித்த அதிதி படம் பாதி வளர்ந்த நிலையில் ஷூட்டிங்குக்கு அடிக்கடி டேக்கா கொடுத்தார். அதை இயக்குநர் தட்டிக்கேட்டபோது தான் அபி சரவணன் என்ற நடிகரைக் காதலிப்பதாகவும் இனி அவர் சம்மதித்தால்தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்றும் இயக்குநருக்கு தொல்லையைக் கொடுத்தார்.

அவரது காதலர் அபி சரவணனோ ‘அதிதி இனி உன்படத்தில் நடிக்கமாட்டார். மீதிப்படத்தை எப்பிடி முடிக்கிறேன்னு பாக்குறேன்’ என்று சவால்விட்டுவிட்டு நடிகயுடன் எஸ்கேப் ஆகிவிட்டார். இது தொடர்பாக நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்த இயக்குநர் அதிதிக்குக் காத்திராமல் அஞ்சலி நாயர் என்ற மற்றொரு புதுமுகத்தை வைத்துப் படத்தை முடித்து தற்போது பிப்ரவரி ரிலீஸுக்குத் தயாராகிவிட்டார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டீஸரையும் 2018ம் ஆண்டில் தமிழ் சினிமாவின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்த்த இயக்குநர்களான ‘96’ பிரேம், ‘ராட்சசன்’ ராம்குமார், ‘மேற்குத்தொடர்ச்சி மலை’ லெனின் பாரதி ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு வெளியிட்டனர்.