ரஜினி, விஜய் படங்களுக்குக் கால்ஷீட் கொடுக்கவே திணறி வரும் நிலையில் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் மிக விரைவில் நடிகை நயன்தாரா நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி கோடம்பாக்கத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு சன்மானமாக அவர் சினிமாவில் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாகப் பெற்றிருப்பதாக செய்திகள் நடமாடுகின்றன.

தமிழில் ரஜினி, விஜய் படங்கள் போக சோலோ ஹீரோயினாக நடித்து வரும் படங்கள், இரண்டு தெலுங்குப் படங்கள், மற்றுமொரு மலையாளப் படம் என்று மிக பிசியாக இருக்கிறார் நடிகை நயன்தாரா. தனது ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு மணிரத்னம் கால்ஷீட் கேட்டபோது, இரண்டு வருடங்களுக்கு என்னால் சுத்தமாக தேதிகளை ஒதுக்கமுடியாது என்று கைவிரித்திருந்தார்.

இந்நிலையில் அவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் நடிக்கவிருக்கிறார் என்று செய்தி வெளியிட்டிருக்கும் அந்நிறுவனம் அவர் பங்கு பெறப்போகும் நிகழ்ச்சி குறித்து சஸ்பென்ஸ் வைத்திருக்கிறது. முன்னணி தொலைக்காட்சி பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை தினங்களுக்குக் கூட பேட்டிதராமல் தவிர்த்து வந்த நயனின் மனதை மாற்றிய அந்தக் கலர்ஃபுல் தொகை எத்தனை சைபர்களைக் கொண்டது என்பது தெரியவில்லை..